சஸ்பெண்ட் பட்டாசு ஆலைகளில் மீண்டும் உற்பத்தி துவங்குமா: வேலை இழந்து தவிக்கும் தொழிலாளர்கள்

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, சாத்துார், வெம்பக்கோட்டை, விருதுநகர் பகுதிகளில் நாக்பூர் சென்னை டிஆர்ஓ உரிமம் பெற்ற 1080 பட்டாசு ஆலைகள் இயங்குகின்றன. 2025 தீபாவளிக்காக பட்டாசு உற்பத்தி மும்முரமாக நடந்து வருகிறது. மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளில் விதி மீறல்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், போலீசார் வருவாய்த்துறை தீயணைப்புத்துறை அடங்கிய ஆறு குழுக்கள் செயல்படுகின்றது.

இக்குழு ஆய்வு செய்து விதி மீறி இயங்கும் பட்டாசு ஆலைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய பரிந்துரை செய்கின்றது. அதன்படி 2024 தீபாவளி சமயத்தில் 50 க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் விதி மீறி இயங்கியதாக தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்டது. 2025 ஜனவரி முதல் நான்கு மாதங்களில் பட்டாசு ஆய்வு குழுவினர் இப்பகுதியில் விதிமீறி இயங்கியதாக 30க்கும் மேற்பட்ட ஆலைகளின் தற்காலிக உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்து அதன்படி உரிமம் ரத்து செய்யப்பட்டது.

இவ்வாறு ரத்து செய்யப்பட்ட பட்டாசு ஆலைகள் மீண்டும் இயங்குவதற்காக ஆலை உரிமையாளர்கள் விண்ணப்பித்தும் இதுவரையிலும் அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உரிய பதிலும் இல்லாததால் ஆலை உரிமையாளர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கின்றனர். இதனால் இந்த ஆண்டு தீபாவளிக்கு பட்டாசு உற்பத்தியில் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும் 2000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு இன்றி தவித்து வருகின்றனர். எனவே தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்ட பட்டாசு ஆலைகள் மீண்டும் இயங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement