பொள்ளாச்சி பலாத்கார வழக்கில் சி.பி.ஐ., வக்கீல் 14 மணி நேரம்  வாதம்

கோவை; கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கல்லுாரி மாணவி மற்றும் பெண்களை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், 2019 ல் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். கோவை மகளிர் கோர்ட்டில் சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததை தொடர்ந்து சாட்சி விசாரணை நடந்து வருகிறது.

அரசு தரப்பு மற்றும் எதிர் தரப்பு சாட்சியம் முடிந்து, கடந்த 5 ம்தேதி எதிரிகளிடம் அரசு தரப்பு குற்றச்சாட்டு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதையடுத்து, சி.பி.ஐ., தரப்பில் மத்திய அரசு வக்கீல் இறுதி வாதம் நடந்து வந்தது. நீதிபதி நந்தினிதேவி முன்னிலையில், நேற்று விசாரணைக்கு வந்தபோது,சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திருநாவுக்கரசு,29, சபரிராஜன்,29, சதீஷ்,32, வசந்தகுமார்,30, மணிவண்ணன்,32, ஹெரன்பால்,34, பாபு,30, அருளானந்தம்,37, மற்றும் அருண்குமார் ஆகியோர் காணொலி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டனர்.

இரண்டாவது நாளாக நேற்று சி.பி.ஐ., தரப்பு வக்கீல் சுரேந்தர் மோகன் இறுதி வாதத்தை முன் வைத்தார். இரண்டு நாட்கள் மொத்தம், 14 மணி நேரம் தொடர்ந்து வாதிட்டார். இறுதி வாதம் முடிந்ததை தொடர்ந்து, எதிர் தரப்பு வக்கீல்கள் வாதிட விசாரணை அடுத்த வாரம் ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement