முஸ்லிம்கள் 99; கிறிஸ்துவர்கள் 57 உட்பிரிவுகள் இருப்பதாக தகவல்

பெங்களூரு: கர்நாடகாவில் சமீபத்திய ஜாதிவாரி கணக்கெடுப்பில், முஸ்லிம் மதத்தில் 99 உட்பிரிவுகளும்; கிறிஸ்துவ மதத்தில் 57 உட் பிரிவுகளும் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கர்நாடகாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை குறித்து சில தகவல்கள் கசிந்து உள்ளது.

இதன்படி, கர்நாடகாவில் மொத்தம் 76.99 லட்சம் முஸ்லிம்கள் உள்ளனர். இதில், 59.51 லட்சம் பேர் வெறும் முஸ்லிம் என்று தங்களை குறிப்பிட்டு உள்ளனர்.

5.50 லட்சம் பேர் 'செய்க்' முஸ்லிம்கள்; 3.49 லட்சம் பேர் 'சன்னி' முஸ்லிம்கள்; 'அட்டாரி, பாக்பன், சப்பர்பண்ட், டார்ஜி, தோபி, இரானி, ஜோஹரி, காலய்கர், மொகல், பட்டேகர், பூல் மாலி, ரங்க்ரெஸ், சிப்பாயி, டகன்கார், டெலி உட்பட 99 உட் பிரிவுகள் உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

இதுபோன்று கிறிஸ்துவர்கள் 9.47 லட்சம் பேர் உள்ளனர். இதில் 7.71 லட்சம் பேர் தங்களை கிறிஸ்துவர்கள் என்று பொதுவாக குறிப்பிட்டு உள்ளனர். மடிகா, பில்லவா, ஈடிகா, ஜங்கமா, கம்மா, குருபர், ஒக்கலிகர், வால்மீகி கிறிஸ்துவர்கள் உட்பட 57 உட் பிரிவுகள் உள்ளன.

கர்நாடக மாநில பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு கமிஷன், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டில் நான்கு முதல் எட்டு சதவீதமும்; கிறிஸ்துவர்களுக்கு எட்டு சதவீதமும் உயர்த்தி பரிந்துரை செய்துள்ளது.

மரியாதை முக்கியம்



முஸ்லிம்கள் உட்பிரிவு குறித்து, சிவாஜி நகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரிஸ்வான் அர்ஷத் கூறியதாவது:

முஸ்லிம்களில் 99 உட்பிரிவுகள் இருப்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. இவர்கள், தாங்கள் செய்யும் தொழிலை வைத்து முஸ்லிம் மதத்துக்கு மாறியவர்கள். உதாரணமாக முஸ்லிம்களிலும் நெசவாளர்கள் உள்ளனர்.

கணக்கெடுப்பில் உள்ள புள்ளி விபரங்களால் எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. எங்களை மரியாதையுடன் நடத்துவதும், நாங்கள் பாதுகாப்பாக உணர்வதும் தான் மிக முக்கியம். முஸ்லிம் இடஒதுக்கீட்டை 8 சதவீதமாக உயர்த்தினால் வரவேற்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜ., சிறுபான்மையினர் பிரிவு தலைவர் அனில் தாமஸ் கூறுகையில், ''2011 மக்கள் தொகை கணக்கெடுப்புபடி, கர்நாடகாவில் 11.44 லட்சம் கிறிஸ்துவர்கள் இருந்தனர். ஆனால் எங்களின் கணக்குப்படி, மாநிலத்தில் 35 லட்சம் கிறிஸ்துவர்கள் உள்ளனர்.

கிறிஸ்துவ மதத்தில் ஜாதிகள் இல்லை. கிறிஸ்துவர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அவ்வாறு இருக்கும் போது, எப்படி 3 லட்சம் குறைந்தது,'' என்றார்.

Advertisement