'உள்ளக புகார் குழு அமைப்பதில் ஆர்வம் காட்டாத நிறுவனங்கள்'

திருப்பூர்; ''திருப்பூரில், பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை தடுக்கும் வகையில், உள்ளக புகார் குழு அமைப்பதில் பெரும்பாலான நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவதில்லை'' என, கலெக்டர் சுட்டிக்காட்டியுள்ளார்.கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிக்கை:

பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை தடுக்கும் பொருட்டு, அனைத்து பள்ளி, கல்லுாரிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில், 10க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரியும் பட்சத்தில், அந்த இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் உள்ளக புகார் குழு அமைக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து பள்ளி, கல்லுாரிகள், அரசு அலுவலகங்களுக்கும் உள்ளக புகார் குழு அமைக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஒரு சில அரசு அலுவலகங்களில் இருந்து மட்டுமே, பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குறித்து, மாதாந்திர அறிக்கை பெறப்படுகிறது.

பெரும்பாலான பள்ளி, கல்லுாரிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து, உள்ளக புகார் குழு அமைக்கப்பட்டதற்கான அறிக்கையோ, புகார் பெறப்பட்ட விவரங்களோ கிடைக்கப் பெறுவதில்லை.

எனவே, உரிய முறையில் உள்ளக புகார் குழு அமைத்து, மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு அறிக்கை அனுப்புவதோடு, அந்த அறிக்கையை தமிழக அரசின், www.tnswd-poshicc.tn.gov.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும். உள்ளக புகார் குழு அமைக்காத பள்ளி, கல்லுாரிகள் மற்றும் பணியிட நிறுவனங்களுக்கு, 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement