நில ஆக்கிரமிப்பு வழக்கில் பிரதிவாதியாக குமாரசாமி

பெங்களூரு: நில ஆக்கிரமிப்பு வழக்கில் மத்திய அமைச்சர் குமாரசாமியை பிரதிவாதியாக சேர்க்க, உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது.

ராம்நகரின் பிடதி கேத்தகானஹள்ளியில் 14 ஏக்கர் அரசு நிலத்தை ஆக்கிரமித்த வழக்கில், மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு, லோக் ஆயுக்தா உத்தரவு பிறப்பித்து இருந்தது. ஆனால் அரசு அலட்சியம் காட்டியது. குமாரசாமி மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட கோரி உயர் நீதிமன்றத்தில், சமூக ஆர்வலர் ஹிரேமத் மனு செய்தார். அந்த மனுவை நீதிபதி சோமசேகர் விசாரிக்கிறார். இந்த மனுவில் அரசையும், வருவாய் துறையையும் பிரதிவாதியாக சேர்த்து உள்ளனர். தங்களையும் வழக்கில் பிரதிவாதியாக சேர்க்க வேண்டும் என்று குமாரசாமி, அவரது உறவினர் தம்மண்ணா ஆகியோர் மனு செய்தனர்.

இந்த மனு மீது நேற்று விசாரணை நடந்தது. இருவரையும் பிரதிவாதியாக சேர்க்க நீதிபதி சோமசேகர் அனுமதித்தார். மனு மீதான அடுத்த விசாரணையை ஜூன் 10 ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

பிரதிவாதியாக இருப்பதால் விசாரணையின் போது, குமாரசாமியின் ஆட்சேபனையை பதிவு செய்யவும் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement