விவசாயிகளுக்கு அபராதம் விதித்த கலெக்டர்; அரசு அதிகாரிகளுக்கு அபராதம் விதிப்பாரா? விவசாயிகள் கேள்வி

கோவை; வருவாய்த்துறைக்கு சொந்தமான நிலங்களில் மண் எடுத்ததாக சொல்லி விவசாயிகளுக்கு அபராதம் விதித்த மாவட்ட நிர்வாகம், மேற்குப்புறவழிச்சாலை திட்டத்துக்காக மண் வெட்டி எடுக்க உத்தரவிட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் அபராதம் விதிப்பாரா என்று விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கோவை மாவட்டம் பேரூர் தாலுகாவுக்குட்பட்ட மலையோர கிராமங்களில் பட்டா நிலங்களிலும் வருவாய்த்துறைக்கு சொந்தமான நிலங்களிலும் மண் வெட்டி எடுத்து கடத்தப்படுவதாகவும், செங்கல்சூளைகளுக்கு பயன்படுத்துவதாகவும் வந்த புகாரை தொடர்ந்து விசாரணையில் இறங்கிய வருவாய்துறை அதிகாரிகள் அதை ஊர்ஜிதம் செய்தனர்.

இதையடுத்து சம்மந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர்களை அழைத்து விசாரணை மேற்கொண்டு மண் எடுத்ததற்காக ஒரு கனமீட்டருக்கு 156 ரூபாய் வீதம் களவு போன மண்ணிற்கு இதுவரை 50 கோடி ரூபாய் வரை அபராதம் விதித்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகளில் பலர் மேல்முறையீடு செய்தனர். அம்மனுக்களை விசாரித்த கலெக்டர் மறுஅளவீடு செய்ய உத்தரவிட்டுள்ளார். இச்சூழலில் கோவை மேற்குப்புறவழிச்சாலை பணிகள் நடந்துவரும் தீத்திபாளையம் கிராமத்தில் வருவாய்த்துறைக்கு சொந்தமான நிலத்தில் அரசு அதிகாரிகள் உத்தரவின் பேரில் செம்மண் வெட்டி எடுக்கப்பட்டது.

இதை கவனித்த விவசாயிகள் போட்டோ மற்றும் வீடியோக்களை எடுத்து, அப்பாவி விவசாயிகளுக்கு அபராதம் விதிக்கும் மாவட்ட நிர்வாகம், இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பார்களா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது குறித்து கோவை தெற்கு கோட்டாட்சியர் ராம்குமாரிடம், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அபராதம் விதிப்பீர்களா அல்லது நடவடிக்கை எடுப்பீர்களா என்று கேள்வி எழுப்பியதற்கு அவர் பதில் எதுவும் சொல்லவில்லை.

இது குறித்து விவசாயி பெரியசாமி கூறியதாவது: யார் மண் வெட்டி எடுத்தாலும் தவறு என்று சொல்லும் மாவட்ட நிர்வாகம், மேற்குப்புறவழிச்சாலை திட்டத்துக்கு மண் வெட்டி எடுக்க அனுமதி வழங்கிய அதிகாரி மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement