மத்திய அரசுக்கு எதிராக பெங்களூரில் காங்கிரசார் போராட்டம்!

பெங்களூரு: காஸ் சிலிண்டர், அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கண்டித்து, மத்திய அரசுக்கு எதிராக பெங்களூரில் நேற்று காங்கிரசார் போராட்டம் நடத்தினர். முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா உட்பட முக்கிய தலைவர்கள் பங்கேற்று, ஆவேச கோஷம் எழுப்பினர்.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளில், அத்தியாவசிய பொருட்கள் விலை தொடர்ந்து உயர்த்தப்படுவதாக, எதிர்க்கட்சியான பா.ஜ., - ம.ஜ.த., போராட்டம் நடத்துகின்றன. குறிப்பாக, 'மக்கள் ஆக்ரோஷ யாத்திரை' என்ற பெயரில், பா.ஜ., பேரணியை நடத்துகிறது.
இதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்து உள்ளது. இதை பொறுத்து கொள்ள முடியாத காங்கிரஸ் தலைவர்கள், அத்தியாவசிய பொருட்கள் விலை உயர மத்திய அரசு தான் காரணம் என்றும், நாங்களும் போராட்டம் நடத்துவோம் என்றும் கூறி இருந்தனர்.
இதன்படி, மத்திய அரசுக்கு எதிராக, பெங்களூரு சுதந்திர பூங்காவில் நேற்று காங்கிரஸ் போராட்டம் நடத்தியது. முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, கட்சியின் தேசிய செயலர் மயூரா ஜெயகுமார் உள்ளிட்ட தலைவர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றனர்.
காஸ் சிலிண்டர், சிமென்ட், இரும்பு, எண்ணெய், பற்பசை, முட்டை உட்பட அத்தியாவசிய பொருட்கள் விலையை, மத்திய அரசு தொடர்ந்து உயர்த்தி வருவதாக கூறி கோஷம் எழுப்பினர்.
* பொய் மூட்டை
இதில், முதல்வர் சித்தராமையா பேசியதாவது:
காங்கிரஸ் அரசு நிதிரீதியாக நல்ல நிலையில் உள்ளது. ஆனால் அரசு திவாலாகி விட்டதாக பா.ஜ.,வினர் பொய் மூட்டைகளை கட்டவிழ்த்து விடுகின்றனர். அரசு திவாலாகி இருந்தால், ஐந்து வாக்குறுதி திட்டங்களுக்கு 56,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்க முடியுமா.
நாட்டில் நிலவும் வேலையின்மை, விலைவாசி உயர்வு பற்றி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருப்பவர்கள் யாரும் பேசுவது இல்லை. திறமையான பொய்கள் மூலம் மக்களை தவறாக வழிநடத்த முயற்சி செய்கின்றனர்.
பால் விலையை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தி உள்ளோம். அந்த பணம், நேராக விவசாயிகளுக்கு தான் செல்கிறது. அரசுக்கு வரப்போவது இல்லை. மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை பல முறை உயர்த்தி உள்ளது. அந்த பணம் யாருக்கு செல்கிறது என்பதை பிரதமர் மோடி தான் வெளிப்படுத்த வேண்டும்.
அம்பேத்கரை தோற்கடித்தது காங்கிரஸ் தான் என்று பொய் பரப்புகின்றனர். ஆனால், அம்பேத்கர் தோற்றதற்கு வீர சாவர்க்கர் தான் காரணம். பொய்களின் தொழிற்சாலையான ஆர்.எஸ்.எஸ்.,க்கு எதிராக நாடு முழுதும் உண்மையை பேசும் துணிச்சலை நாம் வளர்த்து கொள்ள வேண்டும்.
சமையல் எரிவாயு மானியத்தை நீக்கியதன் மூலம், ஏழைகளுக்கு எதிரானவராக பிரதமர் மோடி மாறி விட்டார். அரசியல் என்பது வெறும் அதிகாரத்தை பற்றியது மட்டும் இல்லை. சிந்தாந்த தெளிவுடன் மக்களின் சார்பாக நிற்பதும், தொடர்ந்து போராடுவதும் தான்.
இவ்வாறு அவர் பேசினார்.
* மீண்டும் ஆட்சி
துணை முதல்வர் சிவகுமார் பேசியதாவது:
அத்தியாவசிய பொருட்கள் மீதான விலை உயர்வால், காங்கிரஸ் அரசு மீது மக்கள் கோபப்படவில்லை. மத்திய அரசு மீது கோபத்தில் உள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் பிரச்னையை மறைக்க, பா.ஜ., அரசியல் செய்கிறது. விவசாயிகளுக்கு உதவுவதற்காக பால் விலை உயர்த்தப்பட்டு உள்ளது.
இதற்கு எதிராக போராடுபவர்கள், விவசாயிகளுக்கு எதிரானவர்கள். மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது, நமது மாநிலத்தில் பால் விலை குறைவு. தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயருகிறது. கடந்த 11 ஆண்டுகளாக நடுத்தர வர்க்க பெண்களால், தங்க நகை அணிய முடியவில்லை.
ஊழல் நிறைந்த பா.ஜ.,வுக்கு எதிராக மக்கள் போராட வேண்டும். வரும் 2028 தேர்தலிலும் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும். மத்திய அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து, அமைச்சர்கள் தலைமையில் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
==============
பாக்ஸ்
கடும் போக்குவரத்து நெரிசல்
மத்திய அரசுக்கு எதிராக, காங்கிரஸ் நடத்திய போராட்டத்தால் சுதந்திர பூங்கா, சுற்றியுள்ள சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுதந்திர பூங்காவில் இருந்து ஓக்லிபுரம் வரை, வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள், 'டென்ஷன்' ஆகினர்.
தொடர்ந்து ஹாரன் அடித்து கொண்டே இருந்தனர். வாகனங்களை கட்டுப்படுத்த முடியாமல், போக்குவரத்து போலீசார் திணறினர். போராட்டம் என்ற பெயரில் தொந்தரவு செய்கின்றனரே என்று, காங்கிரஸ் தலைவர்களை திட்டியபடியே வாகன ஓட்டிகள் நகர்ந்து சென்றனர்.
============
ஆட்களை திரட்டிய
அமைச்சர்கள்
சுதந்திர பூங்காவில் நடந்த போராட்டத்திற்கு, அமைச்சர்கள் தங்கள் மாவட்டங்களில் இருந்து ஆட்களை திரட்டி வந்தனர். வேன், பஸ்கள் மூலமாக அழைத்து வந்து இருந்தனர். வாகனங்களில் அமைச்சர்கள் படம் இருந்த பேனர்கள் கட்டப்பட்டு இருந்தன.
***
மேலும்
-
சின்னம் கிடைப்பதற்காக காத்திருக்கிறேன்: சீமான்
-
போதைப்பொருள் வழக்கில் அஜித் பட நடிகர் டாம் சாக்கோ கைது
-
தமிழக மக்களிடம் தொடர்பில் இல்லாத முதல்வர் ஸ்டாலின்: அண்ணாமலை விமர்சனம்
-
உயிருக்கு போராடிய சிறுவன்; நொடியில் காப்பாற்றிய இளைஞருக்கு குவிகிறது பாராட்டு
-
முதல் இடத்தை தக்க வைக்குமா டில்லி? குஜராத்துக்கு எதிராக பேட்டிங்
-
கண்ணியத்துடன் செயல்பட வேண்டும்: விஜய் அறிவுரை