கார் ரேசில் சாதனை படைக்கும் கர்ணா கடூர்

கரடுமுரடான பாதையில் புதிதாக பைக், கார் ஓட்டுவோருக்கு சற்று சவாலாக இருக்கும். ஆனால் பைக், கார் ரேசில் ஈடுபடும் வீரர்களுக்கு சர்வசாதாரணம். எவ்வளவு சவாலான சாலையாக இருந்தாலும் தங்கள் திறமையால் அசத்தி விடுவர். கார் ரேஸ் பல நாடுகளில் நடத்தப்படும் மிக பெரிய விளையாட்டு.

ஒவ்வொரு கார் பந்தய வீரருக்கும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. வேகமாக காரை ஓட்டி செல்வது, தேவையான இடத்தில் வேகத்தை, கூட்டி குறைப்பது கார் ரேசின் விளையாட்டு தந்திரம் ஆகும். கார் ரேசில் சாதனை படைத்தவர்கள் ஏராளம். இவர்களில் ஒருவர், கர்ணா கடூர், 36.

பெங்களூரை சேர்ந்த இவருக்கு 6 வயதில் இருந்தே ரேஸ் பைக் ஓட்ட வேண்டும் என்று ஆர்வம் ஏற்பட்டது. இவரது தந்தை பிரகாஷ், ரேஸ் பைக் ஓட்டுவதில் ஆர்வம் உள்ளவர் என்பதால் மகனின் ஆசைக்கு குறுக்கே நிற்கவில்லை. கர்ணாவுக்கு 9 வயது இருக்கும் போது மோட்டோகிராஸ் போட்டிகளில் பங்கேற்க துவங்கினார்.

கடந்த 2006ம் ஆண்டு வரை பார்முலா ரோலன் பைக் ஓட்டினார். கடந்த 2009க்கு பின், ரேஸ் கார் ஓட்டுவதில் ஆர்வம் காட்டினார். அதில் பயிற்சி பெற்ற பின், பல ரேஸ் கார்களில் மாற்று டிரைவராக சென்றார்.

கடந்த 2011ம் ஆண்டு ஒரு தனியார் நிறுவன ஆதரவுடன், கார் ரேசில் தனி வீரராக பங்கேற்றார். அதில், முதல் தேசிய பட்டத்தை வென்று அசத்தினார். கடந்த 2016ம் ஆண்டு கர்ணாவின் வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தது. யோகோகாமா அணிக்காக கார் ஓட்டிய அவருடன், கார் ரேசில் 35 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த நிகில் பாய் இணைந்தார்.

அவர்கள் இருவரும் சேர்ந்து பல கார் ரேசில் அசத்தினர். கடந்த 2016, 2022, 2024ல் கார் ரேஸ் போட்டியில் மூன்று சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்று அசத்தினர். வோக்ஸ்வாகன் போலோவில் தேசிய சாம்பியன்ஷிப் பட்டம் பெற்ற முதல் டிரைவர் என்ற பெயரையும் கர்ணா பெற்றார்.


இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் நடக்கும் பந்தயங்களிலும் கலந்து கொண்டு தனது துடிப்பான கார் டிரைவிங் மூலம், கார் ரேசிங் ரசிகர்களை மகிழ்வித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளமே வைத்து உள்ளார்
- நமது நிருபர் -
.

Advertisement