ஜொலிக்கும் ராகுல் தவிக்கும் ஆர்.சி.பி.,

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வரும், ஐ.பி.எல்., எனும் இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட்டில் நேற்றுடன் 33 போட்டிகள் நிறைவு அடைந்து உள்ளன. இதில் டில்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் முதல் மூன்று இடங்களில் உள்ளன.

யாரும் எதிர்பாராத வகையில் இந்த ஆண்டு, டில்லி அணி சிறப்பாக விளையாடி வருகிறது. எப்போதும் இல்லாத அளவுக்கு, இம்முறை புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. அந்த அணியில் உள்ள வீரர்கள் ஒவ்வொருவரும், அணியின் வெற்றிக்கு உதவுகின்றனர்.

குறிப்பாக கர்நாடகாவை சேர்ந்த பேட்ஸ்மேன் ராகுல், டில்லி அணியின் முதுகெலும்பாக உள்ளார். அனைத்து போட்டியிலும் சராசரியாக ரன் குவித்து வருகிறார். அதிலும் சமீபத்தில் நடந்த பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில், சின்னசாமி மைதானத்தில் 91 ரன்கள் விளாசி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்று, காந்தாரா பட, 'செலிப்ரேஷன்' செய்தார். இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

பேட்டிங்கில் ராகுல் ஜொலித்து வருவதால், அவரை எப்படியாவது பெங்களூரு அணிக்கு எடுத்து இருக்கலாம் என்று, ரசிகர்களும் கருத்து தெரிவிக்க ஆரம்பித்து உள்ளனர். கடந்த ஆண்டு வரை லக்னோ அணி கேப்டனாக இருந்த ராகுலை, அந்த அணி நிர்வாகம் விடுவித்தது. ஏலத்தில் வந்த அவருக்கு கடும் கிராக்கி ஏற்பட்டது.

எப்படியாவது பெங்களூரு அணி அவரை ஏலத்தில் எடுத்து கேப்டன் ஆக்கும் என்று, ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் ராகுலை, டில்லி அணி தட்டி சென்றது.


ராகுல் பேட்டிங்கில் ஜொலிப்பதால், அவரை எடுக்காமல் விட்டு விட்டோமே என்று, பெங்களூரு அணி நிர்வாகம் தவிக்கிறது. ராகுல் பெங்களூரு அணிக்கு வந்து இருந்தால், பேட்டிங் வரிசை இன்னும் பலமாக இருந்திருக்கும் என்பது, சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விவாதமாக உள்ளது

. - நமது நிருபர் -

Advertisement