கள்ளச்சாராய வழக்கில் மேலும் மூவர் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளச்சாராய வழக்கில் தொடர்புடைய, 3 பேர் மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம், சேஷசமுத்திரம், மாதவச்சேரி பகுதிகளில் கடந்த 2024ம் ஆண்டு ஜூன் 19ம் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து 229 பேர் பாதிக்கப்பட்டனர். 68 பேர் இறந்தனர். இந்த வழக்கில், 24 பேர் கைது செய்யப்பட்டனர்.

தற்போது கள்ளச்சாராய வழக்கை சி.பி.ஐ., போலீசார் விசாரிக்கின்றனர். இந்நிலையில், கடலுார் மாவட்டம் வேப்பூர் அடுத்த நிராமணியை சேர்ந்த தங்கராசு,70; கடந்த 2024,ம் ஆண்டு ஜூன் 19ம் தேதி கள்ளச்சாராயம் குடித்து இறந்தார்.

இதையடுத்து, பலி எண்ணிக்கை 69 ஆனது. பிரேத பரிசோதனை மற்றும் ரத்தமாதிரி ஆய்வக பரிசோதனை அடிப்படையில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் கருணாபுரம் கண்ணுக்குட்டி(எ) கோவிந்தராஜ்,48; தாமோதரன்,40; விஜயா,42; கோட்டைமேடு பரமசிவம்,40; கதிரவன்,30; ஜோசப்,40; சின்னதுரை,36; ஆகியோரை கைது செய்தனர்.

தொடர்ந்து, அவர்கள் அளித்த தகவலின் பேரில் சாராய வழக்கில் ஜாமினில் வெளியே வந்துள்ள மடுகரையை சேர்ந்த மாதவன் மகன் மாதேஷ்,19; ஷாகுல்அமீது,61; கா.மாமனந்தல் தெய்வீகன்,35; ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

Advertisement