2 ஆண்டில் குலசேகரபட்டினத்தில் இருந்து ராக்கெட் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்

4


நாகர்கோவில்: "இன்னும் 2 ஆண்டுகளுக்குள் குலசேகரபட்டினத்தில் இருந்து ராக்கெட் விண்ணுக்கு ஏவப்படும்" என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.


நாகர்கோவிலில் இஸ்ரோ தலைவர் நாராயணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கன்னியாகுமரியில் சூரியன் மறையும் இடத்தில் ஸ்பேஸ் பூங்கா அமைக்க உள்ளோம். அதற்கான நிலத்தை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. குலசேகரபட்டினத்தில் 95% நிலங்கள் கையகப்படுத்தப் பட்டுவிட்டன. இன்னும் 2 ஆண்டுகளுக்குள் குலசேகரபட்டினத்தில் இருந்து ராக்கெட் விண்ணுக்கு ஏவப்படும்.


2025ம் ஆண்டில் இஸ்ரோ நிறைய சாதனைகளை செய்து கொண்டிருக்கிறது. ஜனவரி 6ம் தேதி ஆதித்யா எல்-1 நிலை நிறுத்தி இருக்கிறோம். அதில் இருந்து நிறைய தரவுகள் கிடைத்தன. ஸ்ரீஹரிகோட்டாவில் 3வது லாஞ்ச் பேட் 42 மாதத்தில் அமைக்க 4,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுனிதா வில்லியம்ஸ் இந்தியாவுக்கு வருகை தர உள்ளதாக கூறியிருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

பணி தீவிரம்

இஸ்ரோவுக்கு, ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் 'சதீஷ் தவான்' விண்வெளி ஆய்வு மையத்தில் மட்டுமே ராக்கெட் ஏவுதளம் உள்ளது. பி.எஸ்.எல்.வி., - ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்கள் உதவியுடன் செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்படுகின்றன. நாட்டின் 2வது ஏவுதளம், தூத்துக்குடி மாவட்டத்தின் குலசேகரபட்டினத்தில், 2,230 ஏக்கரில் அமைக்கும் பணி நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement