திருமணம் அன்றே குழந்தை பிறந்தால் வேறு விதமாக தான் இருக்கும்: தி.மு.க., எம்.பி., கல்யாணசுந்தரம் பேச்சு

77


தஞ்சாவூர்: ''திருமணம் ஆனால் கூட பத்து மாதம் பொறுத்து இருந்தால் குழந்தை பிறக்கும். திருமணத்திற்கு முன்பே, திருமணம் அன்றே குழந்தை பிறக்க வேண்டும் என்றால், அது வேறு விதமாக தான் பிறக்கும்,'' என தி.மு.க., எம்.பி., கல்யாணசுந்தரம் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தொகுதிக்குட்பட்ட, சேஷம்பாடி கிராமத்தில் 261 பேருக்கு, கனவு இல்ல வேலையை துவங்குவதற்கான உத்தரவு ஆணையை உயர்கல்வி அமைச்சர் கோவி.செழியன், ராஜ்யசபா எம்.பி., கல்யாணசுந்தரம், கும்பகோணம் எம்.எல்.ஏ., அன்பழகன் ஆகியோர் வழங்கினர்.


இவ்விழாவில் ராஜ்ய சபா எம்.பி., கல்யாணசுந்தரம் பேசியதாவது: அரசு எவ்வித திட்டம் போட்டாலும், அரசுக்கு நற்பெயரை வாங்கிக்கொடுப்பது அரசு அதிகாரிகள் தான். கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த பெரியவர் ஒருவர், கும்பகோணத்தில் முறையான குடிநீர் இல்லை, சாலை இல்லை, தெரு விளக்கு இல்லை என சண்டை போட்டார். அவர் ஏற்கனவே இருந்த இடம் சொந்த இடமா என உணர வேண்டும். எல்லாம் உடனே கிடைத்து விடாது. திருமணம் ஆனால் கூட பத்து மாதம் பொறுத்து இருந்தால் குழந்தை பிறக்கும்.


திருமணத்திற்கு முன்பே, திருமணம் அன்றே குழந்தை பிறக்க வேண்டும் என்றால், அது வேறு விதமாக தான் பிறக்கும். முன்கூட்டியே காதல் செய்து, கர்ப்பமானால் திருமணம் ஆன அன்றே குழந்தை பிறக்கும். எனவே, வருபவர்களிடம் ஆத்திரப்பட்டு பேசுவது, கோபப்பட்டு பேசுவது, திட்டி பேசுவதால், நல்ல விசயங்களை செய்ய வருபவர்களுக்கு ஆர்வம் குறைந்து விடும். அவர்களிடம் அனுசரித்து வேலை எல்லாம் செய்து கொடுங்கள் என கேட்கனுமே தவிர, விதண்டா வாதமாக பேசக்கூடாது. உங்களுக்கு வீடுகள் கட்டி தர வேண்டும் என சட்டம் இல்லை. உங்களின் தேவைகளை அறிந்து கடமையை செய்ய வந்துள்ளோம் இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர் பொன்முடி ஆபாசமாக பேசிய விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள சூழலில், ராஜ்யசபா எம்.பி., உதாரணம் என்ற பெயரில், பேசிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement