பல கோடி ரூபாய் மதிப்புள்ள திமிங்கல எச்சத்தை விற்பனை செய்ய முயன்ற 3 பேர் கைது

ராசிபுரம்: நாமக்கல் அருகே பலகோடி ரூபாய் மதிப்புள்ள திமிங்கல எச்சத்தை விற்பனை செய்ய முயன்ற 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.


நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பேளுக்குறிச்சி அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான ஜி.வி.ஆர்., தோட்டத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள திமிங்கல எச்சத்தை பதுக்கி வைத்து விற்பனை நடைபெறுவதாக ராசிபுரம் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து கடந்த இரண்டு நாட்களாக வனச்சரக அலுவர் சக்திவேல் தலைமையில் வனத்துறையினர் சம்பந்தப்பட்ட பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், நேற்று சந்தேகிக்கும்படி இரண்டு கார்கள் தோட்டத்திற்குள் சென்றது. இதைப்பார்த்த வனத்துறையினர் அதிரடியாக உள்ளே நுழைந்து அங்கிருந்தவர்களை சுற்றி வளைத்தனர். அப்போது, இரண்டு பேர் தப்பியோடினர். அங்கு ஏம்பர்கிரீஸ் என்றழைக்கப்படும் திமிங்கல எச்சத்தை விற்பனைக்கு வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.

பேளுக்குறிச்சியை சேர்ந்த கோபால் மகன் வெங்கடேசன், 55, சேலத்தை சேர்ந்த பாபு மகன் ஜலீல், 58, செங்கோடன் மகன் ரவி, 55, ஆகியோரை பிடித்து விசாரித்தனர். இதில், தப்பியோடியவர்கள் கொல்லிமலையை சேர்ந்த சந்திரன் மற்றும் வாழப்பாடி பகுதியை சேர்ந்த ராம்குமார் என்பது தெரிந்தது.

மேலும், அவர்களிடம் இருந்தது பல கோடி மதிப்புள்ள, 18 கிலோ திமிங்கல எச்சம் மற்றும், 5 செல்போன்கள், 2 கார்களை பறிமுதல் செய்ததுடன் , 3 பேரையும் ராசிபுரம் வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். இதில், திமிங்கல எச்சத்தை சந்திரன், ராம்குமார்தான் எடுத்து வந்தனர் என்றும், இதை விலை காட்டி விற்கும் பணிக்காக மூன்று பேர் வந்ததும் தெரிந்தது.

இதையடுத்து, 3 பேரையும் கைது செய்து சேந்தமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட திமிங்கல எச்சத்தை பரிசோதனை செய்ய மாவட்ட வன அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து ராசிபுரம் வனச்சரக அலுவலர் சக்திவேல் கூறியதாவது: ஏம்பர்கிரீஸ் என்று சர்வதேச அளவில் அழைக்கப்படும் திமிங்கலம் எச்சம், அல்லது திமிங்கல வாந்தி என்பது கடல் பகுதியில் திமிங்கலத்திற்கு ஜீரணம் ஆகாமல் உமிழும் பொருளாகும். இது கடல் தண்ணீர், வெப்பம் ஆகியவற்றுடன் சேர்ந்து ஏம்பர்கிரீஸ் ஆக மாறுகிறது. வாசனை திரவியம், மருத்துவத்துறைக்கு இது அதிகளவு பயன்படுகிறது.

தரமான ஒரு கிலோ ஏம்பர் கிரீஸ் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ளது. வெளி நாடுகளுக்கு அதிகளவு கடத்தப்படுகிறது. கடலோர பகுதியில் கிடைக்கும் இந்த பொருள் எவ்வாறு இங்கு வந்தது எவ்வளவு விலைக்கு வாங்கினார்கள், விற்றார்கள் என்பது தப்பியோடிய இரண்டு பேரை பிடித்தால்தான் தெரிய வரும். இதன் தரம் குறித்து தெரிந்து கொள்ள ஆய்வுக்கு அனுப்பியுள்ளேன். தப்பியோடியவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சக்திவேல் கூறினார்.

Advertisement