மகளிருக்கான 'பிங்க் ஆட்டோ'வை ஓட்டும் ஆண்கள் * அரசின் நோக்கம் சிதைப்பா?

சென்னை, பெண்கள் மற்றும் சிறுமியரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சென்னையில் அரசால் அறிமுகம் செய்யப்பட்ட 'இளஞ்சிவப்பு ஆட்டோ'க்கள் பெரும்பாலும், ஆண்களே ஓட்டுகின்றனர். இதனால், மகளிர் நலன் சார்ந்த அரசின் நோக்கம் சிதைக்கப்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பெண்கள் மற்றும் சிறுமியரின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, பெண்கள் சுயதொழில் வேலை வாய்ப்பு பெறும் நோக்கில், இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டத்தை, தமிழக அரசு சென்னையில் அறிமுகம் செய்தது.

முதற்கட்டமாக, 165 பெண்களுக்கு, திறன் மேம்பாட்டு கழகம் வாயிலாக ஆட்டோ ஓட்ட பயிற்சி அளிக்கப்பட்டது. ஓட்டுனர் உரிமம், இளஞ்சிவப்பு நிற ஆடை உள்ளிட்டவை அரசால் வழங்கப்பட்டன. இந்த திட்டத்தை, மார்ச் 8 ம் தேதி முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். மேலும், 85 பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

பெண்கள் மேம்பாடு, பாதுகாப்புக்காக துவக்கப்பட்ட இந்த ஆட்டோவை பெரும்பாலும் ஆண்களே ஓட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து, பெண் பயணி ஒருவர் கூறியதாவது:

தி.நகர் செல்வதற்காக சைதாப்பேட்டையில் காத்திருந்தேன். இளஞ்சிவப்பு ஆட்டோவை பார்த்ததும், அதில் பயணிக்கும் உற்சாகத்துடன் ஆட்டோவை நிறுத்தினேன். ஆனால், ஆண் ஓட்டுநரே இருந்தார். இதுகுறித்து, அவரிடம் கேட்டபோது, பதிலளிக்காமல் சென்று விட்டார்.

பெண்களின் பாதுகாப்பிற்கு என்று அறிமுகம் செய்யப்பட்ட ஆட்டோவை, ஆண் ஓட்டுநர் ஓட்டுவதை ஏற்க முடியவில்லை. அதற்கு ஏன் அரசு இளஞ்சிவப்பு ஆட்டோ என்ற பெயரிட்டு, பெண்களுக்கு பயிற்சி வழங்க வேண்டும்.

சைதாப்பேட்டை, கிண்டி, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், பிங் ஆட்டோவை ஆண்களே ஓட்டுகின்றனர்.

முறையாக கண்காணிக்காத சமூக நலத்துறை அதிகாரிகளே இதற்கு காரணம். பிங்க் ஆட்டோவை ஆண்கள் இயக்கினால், உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். அப்போதுதான் தீர்வு கிடைக்கும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

பிரத்யேக செயலி

'அரசு இளஞ்சிவப்பு ஆட்டோ வழங்கி ஒரு மாதத்திற்கு மேலாகிறது. ஆனால், பெண்களைவிட ஆண் பயணியரே அதிகம் சவாரிக்கு வருகின்றனர். என்ன செய்வது என்று தெரியவில்லை. இளஞ்சிப்பு ஆட்டோக்களுக்கு என்று பிரத்யேக செயலியை அரசு வடிவமைத்து தந்தால், பெண்கள் எளிதில் இந்த ஆட்டோவை பயன்படுத்துவர்' என்ற கோரிக்கை வந்துள்ளது.

இதை கருத்தில் வைத்து பிங்க் ஆட்டோக்களுக்கு என்று, 'ஊர் கேப்ஸ்' என்ற செயலி வடிவமைக்கப்பட்டு வருகிறது. விரைவில் இச்செயலி பயன்பாட்டிற்கு வரும்.

- சமூக நலத்துறை அதிகாரிகள்.

Advertisement