14 ஆண்டு கால பண மோசடி வழக்கில் ஜெகன் மோகனின் சொத்துகள் முடக்கம்

புதுடில்லி: ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மீது, 14 ஆண்டுகளுக்கு முன் பதியப்பட்ட சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில், தற்போது அவருக்கு சொந்தமான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கி உள்ளது.
ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில், தெலுங்கு தேசம் - ஜனசேனா - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
குற்றச்சாட்டு
இங்கு, 2019 - 24 ஜூன் வரை, ஒய்.எஸ்.ஆர்.காங்., தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக பதவி வகித்தார்.
இவருக்கு சொந்தமான, 'ரகுராம் சிமென்ட்ஸ்' நிறுவனத்தில், 'டால்மியா சிமென்ட்ஸ் பாரத் லிமிடெட்' நிறுவனம், 95 கோடி ரூபாய் முதலீடு செய்தது.
இதற்கு கைமாறாக, தன் தந்தையும், அப்போதைய முதல்வருமான ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் செல்வாக்கை பயன்படுத்தி, கடப்பா மாவட்டத்தில், 407 ஹெக்டேர் பரப்பளவிற்கான சுரங்க குத்தகையை, அந்நிறுவனத்துக்கு ஜெகன் மோகன் பெற்று தந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இதையடுத்து, ரகுராம் சிமென்ட்ஸ் நிறுவனத்தில் தங்களுக்குள்ள பங்குகளை, ஆடிட்டரும், முன்னாள் எம்.பி.,யுமான விஜய சாய் ரெட்டி, டால்மியா சிமென்ட்ஸ் பாரத் நிறுவனத்தின் புனீத் டால்மியா ஆகியோர், ஐரோப்பிய நாடான பிரான்சை சேர்ந்த, 'பர்பிசிம்' என்ற நிறுவனத்துக்கு, 135 கோடி ரூபாய்க்கு விற்றனர்.
இதில், 55 கோடி ரூபாய், 'ஹவாலா' பரிவர்த்தனை வாயிலாக, 2010 மே 16 - 2011 ஜூன் 13 வரையிலான காலத்தில், ஜெகன் மோகனுக்கு வழங்கப்பட்டது.
சட்ட விரோத வழிகளில் கிடைத்த பணத்தையே, ரகுராம் சிமென்ட்ஸ் நிறுவனத்தில், டால்மியா சிமென்ட்ஸ் பாரத் நிறுவனம் முதலீடு செய்ததாகவும் புகார் எழுந்தது.
இந்த முறைகேடு குறித்து, சி.பி.ஐ., 2011ல் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறது.
இதில் நடந்த சட்ட விரோத பணப் பரிமாற்றம் குறித்து, அமலாக்கத் துறையும் தனியாக விசாரித்து வருகிறது.
ரூ. 800 கோடி
இந்நிலையில், இந்த வழக்கில் 14 ஆண்டு களுக்கு பின், முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் டால்மியா சிமென்ட்ஸ் பாரத் நிறுவனத்தின், 800 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை, அமலாக்கத் துறை நேற்று முடக்கியது.
ஜெகன் மோகனுக்கு சொந்தமான, 27.5 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகள் மற்றும் டால்மியா சிமென்ட்ஸ் பாரத் நிறுவனத்தின், 377 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் முடக்கப்பட்டுள்ளன.
எனினும், இந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு, 793.3 கோடி ரூபாய் என, டால்மியா சிமென்ட்ஸ் பாரத் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும்
-
மஹாத்மா காந்தி, நேருவிடம் கற்றுக் கொண்டது என்ன: ராகுல் பேட்டி
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு