எரியாத தெருவிளக்குகளால் ஏற்படும் விபத்து உயிரிழப்புகளுக்கு மாநகராட்சியே பொறுப்பு

மணலி, மணலி - எம்.எப்.எல்., சந்திப்பில் இருந்து சத்தியமூர்த்தி நகர் வரையிலான மணலி விரைவு சாலையில், தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன.

மாதவரம், மீஞ்சூர், மணலிபுதுநகர், விச்சூர், மணலி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சரக்கு பெட்டக முனையங்களில் இருந்து, சென்னை துறைமுகம் நோக்கி செல்லும் கன்டெய்னர் லாரிகளுக்கும், இதுவே பிரதான சாலையாகும்.

இந்நிலையில், கன்டெய்னர் லாரிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், போக்குவரத்து போலீசார் சார்பில், கான்கிரீட் தடுப்பு கற்கள் வைக்கப்பட்டு, தனி வழி ஏற்படுத்தப்பட்டது. இதனால், கன்டெய்னர் லாரிகளில் ஏற்படும் பிரச்னைக்கு, தற்காலிக தீர்வு கிடைத்தது.

இது ஒருபுறமிருப்பினும், மணலி விரைவு சாலையில், தெருவிளக்குகள் அவ்வபோது எரியாமல், கும்மிருட்டாக இருப்பதால், தற்காலிக கான்கிரீட் தடுப்பு கற்கள் தெரியாமல், டூ - வீலர், ஆட்டோ துவங்கி கனரக வாகனங்கள் வரை மோதி, விபத்தில் சிக்குகின்றன.

சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. எனவே, தெருவிளக்குகளை பராமரிக்கும் மாநகராட்சி மின்பிரிவு அதிகாரிகள் கவனித்து, தெருவிளக்குகள் எரியாமல் இருப்பதற்கான காரணத்தை கண்டறிந்து, தீர்வு காண வேண்டும்.

தவிர, தொடர்ந்து பராமரிக்கும் பணியையும் மேற்கொள்ள வேண்டும். இல்லாவிடில், இரவு நேரங்களில் கான்கிரீட் தடுப்பு சுவர்களில் மோதி ஏற்படும் உயிரிழப்புகளுக்கு, மாநகராட்சியே பொறுப்பேற்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எச்சரிக்கின்றனர்.

Advertisement