ரேஷன் அரிசியை கடத்தும் ஆந்திர பெண்கள் உணவு வழங்கல் துறை அதிகாரிகள் கொர்ர்ர்...!
திருவொற்றியூர்,
திருவொற்றியூர் உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மண்டலத்தின் கீழ், 104 ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. இங்கு, ஒரு லட்சத்திற்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்கள், அரிசி, சர்க்கரை, பாமாயில், துவரம் பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்களை வாங்குகின்றனர். இதில், பச்சரிசி மற்றும் புழுங்கல் அரிசி விலையின்றி வழங்கப்பட்டு வருகின்றன.
ஆந்திராவிற்கு மின்சார ரயில் மார்க்கம் இருக்கும், எண்ணுார், திருவொற்றியூர், மணலி, தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள ரேஷன் கடையில் வினியோகமாகும் விலையில்லா அரிசியை, குடும்ப அட்டைதாரர்களிடம் இருந்து, ஆந்திராவைச் சேர்ந்த பெண்கள் சிலர், குறைந்த விலைக்கு வாங்கி செல்கின்றனர்.
அதன்படி, பச்சரிசி ஐந்து ரூபாய்க்கும், புழுங்கல் அரிசி ஏழு ரூபாய்க்கும் வாங்கி செல்பவர்கள், மின்சார ரயில் மூலம், ரயில்வே போலீசாருக்கு போக்கு காட்டி கடத்தி செல்கின்றனர். ஆந்திராவில், 20 - 30 ரூபாய்க்கு விற்று வருவதாக கூறப்படுகிறது.
சில இடங்களில், ரேஷன் கடைகளின் அருகேயே முகாமிட்டிருக்கும் ஆந்திர பெண்கள், குடும்ப அட்டைதாரர்களிடமிருந்து, அங்கேயே ரேஷன் அரிசியை, பணம் கொடுத்து வாங்கிக் கொள்கின்றனர்.
குடும்ப அட்டைதாரர்கள் சிலர் அரிசி வாங்க பை எடுத்து செல்வதில்லை. மாறாக, கடை அருகே காத்திருக்கும், ஆந்திர பெண்களின் பைகளை வாங்கி, ரேஷன் அரிசியை வாங்கிக் கொடுத்து, பணம் வாங்கி செல்கின்றனர்.
ஒரு சில நியாயவிலைக் கடைகளிலேயே, இப்பெண்கள் அரிசியை மொத்தமாக வாங்கி செல்வதையும் பார்க்க முடிகிறது. இது குறித்து, உணவு வழங்கல் துறை அதிகாரிகள் தெரிந்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதில்லை.
சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, ரேஷன் அரிசியை விற்கும், குடும்ப அட்டைதாரரின் அரிசி உரிமையை ரத்து செய்ய வேண்டும். அரிசியை வாங்கி செல்லும் ஆந்திர பெண்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரிசியை விற்கும் சம்பவம் அறிந்து கண்டுக் கொள்ளாமல் இருந்த மற்றும் அரிசியை மொத்தமாக ஆந்திர பெண்களுக்கு விற்ற ரேஷன் கடை ஊழியர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது
மேலும்
-
மஹாத்மா காந்தி, நேருவிடம் கற்றுக் கொண்டது என்ன: ராகுல் பேட்டி
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு