வீடு வழங்க தாமதமானதால் ரூ.10 லட்சம் இழப்பீடு

சென்னை,
அண்ணா நகரில் 'ஓசோன் புராஜக்ட்ஸ்' நிறுவனம் சார்பில் 'மெட்ரோசோன்' என்ற பெயரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டது. இதில், 2.01 கோடி ரூபாய் விலையில் வீடு வாங்க பிரவீன் குமார் ஜெயின் என்பவர், 2009ல் முன்பதிவு செய்தார்.

இதைத்தொடர்ந்து, 2010ல் வீடு வாங்குவதற்கான ஒப்பந்தங்களை அவர் மேற்கொள்கிறார். இதில், 2012ல் வீட்டை ஒப்படைப்பதாக கட்டுமான நிறுவனம் தெரிவித்தது.

வங்கிக்கடன் வாயிலாக வீட்டின் விலையாக முடிவு செய்யப்பட்ட தொகையை, பிரவீன் குமார் ஜெயின் செலுத்தினார். ஆனால், வீடு 2016ல் தான் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இருந்தும், வீட்டில் பல்வேறு குறைபாடுகள் இருந்துள்ளன. இதையடுத்து, பிரவீன் குமார் ஜெயின், ரியல் எஸ்டேட் ஆணையத்தில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக ஆணையத்தின் விசாரணை அலுவலர் என்.உமா மகேஸ்வரி பிறப்பித்த உத்தரவு:

ஒப்பந்தத்தில் தெரிவித்தபடி, குறித்த காலத்தில் கட்டுமான நிறுவனம் வீட்டை ஒப்படைக்கவில்லை. மேலும், வீட்டில் பல்வேறு குறைபாடுகள் இருப்பது உறுதியாகிறது.

இதனால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நிவாரணமாக, 10 லட்ச ரூபாயும், வழக்கு செலவுக்காக, 50,000 ரூபாயும் கட்டுமான நிறுவனம் அளிக்க வேண்டும்.

இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளில் இருந்து, 90 நாட்களுக்குள் கட்டுமான நிறுவனம் இழப்பீட்டை அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

***

Advertisement