தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்

வாணியம்பாடி:பள்ளி தண்ணீர் தொட்டியை மாணவர்கள் சுத்தம் செய்ததால், தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஆவாரங்குப்பம் பஞ்., யூனியன் நடுநிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலர், ஏப்., 15ம் தேதி மதியம் அங்குள்ள தண்ணீர் தொட்டியில் துடைப்பத்தை வைத்து சுத்தம் செய்யும் வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியது.

மேலும், ஆபத்தான முறையில் கட்டடத்தின் மேல் ஏறி, அங்கே இருந்த தண்ணீர் தொட்டியை மாணவர்கள் சுத்தம் செய்யும் காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியது.

படிக்க வரும் மாணவர்கள் கையில் துடைப்பத்தை கொண்டு சுத்தம் செய்ய வைக்கும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பாக, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மலைவாசன் விசாரணை நடத்தி, பள்ளி தலைமை ஆசிரியை உமாராணியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

Advertisement