சத்தீஸ்கரில் 11 பெண்கள் உட்பட 33 நக்சல்கள் போலீசில் சரண்
சுக்மா: சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில், 11 பெண்கள் உட்பட 33 நக்சல்கள் போலீசில் சரணடைந்தனர்.
இதில், இருந்த 17 பேர் தலைக்கு, 49 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருந்தது.
சத்தீஸ்கரில், முதல்வர் விஷ்ணு தியோ சாய் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இம்மாநிலத்தில், நக்சல்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் அவர்களுக்கு என, சரணடைதல் மற்றும் மறுவாழ்வு கொள்கையை மாநில அரசு அறிவித்துள்ளது.
'உங்கள் நல்ல கிராமம்' என்ற, அரசின் திட்டத்தால் கவரப்பட்ட 33 நக்சல்கள், மூத்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் முன் சரணடைந்துள்ளனர்.
இது குறித்து சுக்மா மாவட்ட போலீஸ் எஸ்.பி., கிரண் சவான் கூறியதாவது:
சத்தீஸ்கரின் மாட் மற்றும் ஒடிசாவின் நுவாபாடா பகுதியில், தீவிரமாக செயல்பட்டு வந்த 22 நக்சல்கள் நேற்று காலை போலீசில் சரணடைந்தனர். தொடர்ந்து மேலும், 11 நக்சல்கள் சரணடைந்தனர். இதனால் சரணடைந்த நக்சல்கள் எண்ணிக்கை, 33 ஆக அதிகரித்துள்ளது. இதில், 11 பேர் பெண்கள்.
சரண் அடைந்தவர்களில், 17 பேர் தலைக்கு மொத்தம் 49 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருந்தது.
மாவோயிஸ்ட்களின் வெற்று சித்தாந்தம் மற்றும் மனிதாபிமானமற்ற செயல்கள், உள்ளூர் பழங்குடியினர் மீதான அட்டூழியங்களால் வெறுப்படைந்து சரண் அடைந்ததாக நக்சல்கள் தெரிவித்தனர்.
இதில், மாட் பகுதியில் செயல்படும் மாவோயிஸ்ட்களான மக்கள் விடுதலை கொரில்லா படையின் துணை தளபதி முச்சாகி ஜோகா, 33, அவரது மனைவியும் அதே படையின் உறுப்பினருமான முச்சாகி ஜோகி, 28, ஆகிய இருவரும் சரண் அடைந்துள்ளனர்.
இவர்களது தலைக்கு தலா 8 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது.
இதே போல் தலைக்கு, 5 லட்சம் ரூபாய் அறிவிக்கப்பட்டிருந்த மாவோயிஸ்ட் உறுப்பினர்கள் கிகிட் தேவ், 30, துபி புத்ரா, 28, ஆகியோருடன், தலா 2 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்ட ஏழு நக்சல்கள் சரண் அடைந்தனர்.
அதோடு, தலைக்கு 50,000 ரூபாய் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டு இருந்த, 11 நக்சல்களும் சரண் அடைந்துள்ளனர். சரணடைந்த அனைத்து நக்சல்களின் மறுவாழ்வுக்காக தலா 50,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது