14 ஐ.ஏ.எஸ்.,கள் மாற்றம்

புதுடில்லி: மத்திய வருவாய் துறை செயலராக மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி அரவிந்த் ஸ்ரீவஸ்தவாவை நியமித்து, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. இதேபோல், பல்வேறு துறைகளுக்கான செயலர்களும் மாற்றப்பட்டுள்ளனர்.

மத்திய அமைச்சரவையின் நியமன குழு ஒப்புதலின்படி, மத்திய நிதியமைச்சகத்தின் வருவாய் பிரிவின் செயலராக மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியான அரவிந்த் ஸ்ரீவஸ்தவா நியமிக்கப்பட்டுள்ளார். 1994ம் ஆண்டின் கர்நாடக மாநில கேடர் ஐ.ஏ.எஸ்., அதிகாரியான இவர், பிரதமர் அலுவலகத்தின் கூடுதல் செயலராக தற்போது பணியாற்றி வருகிறார்.

இதேபோல், சிவில் விமான போக்குவரத்து செயலராக உள்ள ஐ.ஏ.எஸ்., அதிகாரி உம்லுங்மங் உவல்னம், செலவீன பிரிவுக்கான செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இப்பிரிவின் செயலராக இருந்த மனோஜ் கோவில், தற்போது அமைச்சரவை செயலகத்தின் செயலராக மாற்றப்பட்டுள்ளார்.

மத்திய கலாசாரத் துறையின் செயலராக விவேக் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக இவர், வருவாய் பிரிவின் கூடுதல் செயலராக பணியாற்றி வந்தார். இதேபோல் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறையின் சிறப்பு செயலராக ராஜேஷ் அகர்வால் மாற்றப்பட்டுள்ளார். மொத்தம் 14 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை ஒரே நாளில் மாற்றி, மத்திய அரசு உத்தர விட்டுள்ளது.

Advertisement