ரோட்டோர வாகனங்களால் நெருக்கடி: நடைபாதைக்கு நிதி ஒதுக்கியும் கிடப்பில் பணிகள்

காரியாபட்டி:
காரியாபட்டியில் முக்கு ரோட்டில் இருந்து பஜார் வரை ரோட்டோரத்தில் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தி வருவதால் நெருக்கடியான சூழ்நிலை இருந்து வருகிறது.
இதனை தடுக்க ரோட்டோரத்தில் நடைபாதை அமைத்து பேவர் பிளாக் கற்கள் பதிக்க நிதி ஒதுக்கியும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. சிரமம் ஏற்பட்டு வருவதால் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண விரைந்து பணிகளை துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காரியாபட்டி, மதுரை - துாத்துக்குடி ரோட்டில் அமைந்துள்ளதால் எப்போதும் போக்குவரத்து மிகுந்து காணப்படும். முக்கு ரோட்டில் இருந்து பஜார் வரை ரோட்டோரங்களில் நடமாடும் கடைகள்,காய்கறி கடைகள், கடைகாரர்களின் ஆக்கிரமிப்பு, கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் டூவீலர்கள், கார்கள், ஆட்டோக்கள், மினி வேன்கள் என நிறுத்தி போக்குவரத்திற்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகின்றனர்.
2, 3 வாகனங்கள் விலகிசெல்ல இடமிருந்தும் ஒரு வாகனம் செல்வதற்கே பெரிதும் சிரமம் ஏற்படுகிறது. இதனால் அடிக்கடிவிபத்து ஏற்பட்டு வருகிறது.
வாகன ஓட்டிகள்அதிக சத்தம் எழுப்பி வழி கேட்கும் போது ஒருவருக்கொருவர் தகராறில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்பிரச்னைக்கு தீர்வு காண முக்கு ரோட்டில் இருந்து பஜார் வரை ரோட்டோரத்தில் நடைபாதை அமைத்து பேவர் பிளாக் கற்கள் பதிக்க வேண்டும் என தொடர்ந்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டு வந்தது.
இதையடுத்து நடைபாதை அமைத்து, பேவர் பிளாக் கற்கள் பதிக்க ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டு பல மாதங்கள் ஆகிறது. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கிடப்பில் போடப்பட்டுள்ளதால், தொடர்ந்து போக்குவரத்திற்கு நெருக்கடி இருந்து வருகிறது. பணிகளை விரைந்து துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போக்குவரத்திற்கு சிரமம்
சுரேஷ், தனியார் ஊழியர்: பஸ் ஸ்டாண்டில் இருந்து முக்கு ரோட்டை கடப்பதற்குள் படாதபாடு படுகின்றனர். அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காண தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பணியை துவக்குங்க
திருமலை, விவசாய அணி மாநில பொதுச் செயலாளர்:3 வாகனங்கள் விலகி செல்லும் அளவிற்கு நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடம் உள்ளது. ஆனால் ஒரு வாகனம் கூட எளிதில் செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
தீர்வு
கடைக்காரர்கள்ஆக்கிரமித்திருப்பதை அகற்ற வேண்டும். டூவீலர்கள், கார், ஆட்டோ, மினி வேன் உள்ளிட்ட வாகனங்களை ரோட்டோரத்தில் நிறுத்துவதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இப்பிரச்னைக்கு தீர்வு காண நடைபாதை அமைத்து, யாரும் ஆக்கிரமிக்காத படி தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை கிடப்பில் போடாமல், விரைந்து பணிகளை துவக்க வேண்டும். அப்போதுதான் நீண்ட காலமாக இருக்கும் இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியும்.
மேலும்
-
மஹாத்மா காந்தி, நேருவிடம் கற்றுக் கொண்டது என்ன: ராகுல் பேட்டி
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு