மரக்கன்றுகள் நட்டு வளர்க்க மாவட்ட நீதிபதி 'அட்வைஸ்'

விழுப்புரம், ; அனைவரும் கட்டாயம் மரக்கன்றுகள் நட்டு வளர்க்க வேண்டும் என முதன்மை மாவட்ட நீதிபதி மணிமொழி பேசினார்.

விழுப்புரம் அடுத்த செல்லங்குப்பத்தில் நடந்த மரக்கன்று நடும் விழாவில் அவர் பேசியதாவது;

மரக்கன்றுகள் நட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பது குறித்தும், இலவச சட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த இந்நிகழ்ச்சி நடக்கிறது. மக்கள் தொகை அதிகரிப்பு, வாகனம் பெருகி விட்டதால், சாலைகள் விரிவடைந்து சாலை ஓரங்களில் மரங்கள் காணப்படுவதில்லை.

இந்த நிலையை மாற்ற மாவட்டத்தில் உள்ள சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் வருவாய்த்துறை, வனத்துறை உதவியோடு 2000 மரக்கன்றுகள் நடவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மரக்கன்றுகள் நட்டு வைப்பது மட்டுமல்லாமல், தொடர்ந்து பராமரித்து வளர்க்க வேண்டும். பள்ளிகளில் நடப்படும், மரங்கன்றுகளை தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பராமரித்து, பாதுகாக்க வேண்டும். நெடுஞ்சாலை மற்றும் கிராமப்புறங்களில் நடப்படும் மரக்கன்றுகளை ஊரகவளர்ச்சித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் கண்காணித்து பராமரிக்க வேண்டும். மரம் என்பது ஆக்சிஜன் வழங்குவது மட்டுமின்றி பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்கு பெரும் பங்கு தரக்கூடிய ஒன்றாக உள்ளது. அனைவரும் கட்டாயம் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும்.

நீதி உங்கள் வீட்டு கதவை தேடி வருவது தான் இலவச சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் முக்கிய நோக்கம். சட்ட உதவி மையம் மூலம், பொதுமக்களின் பிரச்னைகளுக்கு வாதாடும் வழக்கறிஞர்களுக்கான கட்டணத்தை அரசே வழங்குகிறது. எனவே, ஜீவனாம்சம், கடன் பிரச்னை, வரதட்சனை கொடுமை போன்ற பிரச்னைகள் இருந்தால் இலவச சட்ட உதவி மையத்தினை அணுகலாம். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement