வானிறைக்கல், புடைப்பு சிலைகள் பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக அறிவிப்பு

ராஜபாளையம்,:விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மீனாட்சிபுரத்தில் வானிறைக்கல் உள்ளிட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் 'தினமலர்' செய்தி எதிரொலியாக பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக தமிழக தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

ராஜபாளையம் அருகே மீனாட்சிபுரத்தில் இருந்து தென்மலை செல்லும் வழியில் குன்றக்குடி என அழைக்கப்படும் குன்றுகளில் பாறை ஓவியங்கள் வெண்ணை உருண்டை எனப்படும் வானிறைப் பாறை, குகைகள் உள்ளன.

இதன் அருகே உள்ள புத்துார், மாங்குடி உள்ளிட்ட பகுதியில் தொல்லியல் சிற்பங்கள் சமணர் படுக்கை உள்ளிட்ட வரலாற்று சிறப்பு வாய்ந்த இடங்கள் பாதுகாப்பு இன்றி உள்ளன.

இது குறித்து ஏப்.9ல் மகாபலிபுரத்தில் உள்ளதை போன்று அதிசய வானிறைக் கல் என குன்றத்து மலையில் குறுகலான அடிப்பகுதி தாங்கி நிற்கிறது என செய்தி தினமலர் நாளிதழில் வெளியானது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மீனாட்சிபுரம் வானிறைக்கல், குகை ஓவியம், புடைப்பு சிற்பங்கள் உள்ளிட்டவற்றை பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக சட்டசபையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

செய்தி வெளியிட்டதற்காக 'தினமலர்' நாளிதழுக்கு இப்பகுதி வரலாற்று ஆர்வலர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Advertisement