நல்ல திட்டங்களை அரசு செய்து கொடுக்கிறது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஹேமலதா பேச்சு

ஓசூர், ''அரசு பல நல்ல திட்டங்களை செய்து கொடுப்பதால், மக்கள் அவற்றை பயன்படுத்தி முன்னேற வேண்டும்,'' என, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஹேமலதா பேசினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மரக்கன்றுகள் நடும் திட்ட துவக்க விழா நேற்று நடந்தது. தலைமை வகித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஹேமலதா பேசியதாவது: மரங்கள் கார்பன்டை ஆக்சைடை எடுத்து கொண்டு, மனிதர்கள் சுவாசிக்க ஆக்சிஜனை கொடுக்கிறது. நாம் காடுகளை அழித்து கட்டடங்கள், தொழிற்சாலைகள் கட்டினோம். மரங்களை அழித்ததால் காலநிலை மாற்றம், பருவநிலை மாற்றம், பூமி வெப்பமயமாதல், காற்று மாசுப்படுதல் போன்ற பிரச்னைகளை அனுபவித்தோம். மரங்கள் இயற்கையான காற்று வடிகட்டியாக செயல்படுகின்றன. மரங்கள் மீண்டும் இயற்கையாகவே வளர முடியாத பகுதிகளில் மரம் நடுவதன் மூலம், வனப்பகுதியை மீண்டும் நிலைநாட்டவும், வன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் முடியும். ஆகவே, மரம் நட்டு அவற்றை பாதுகாப்பது, நமது கடமையாகும்.

சாதாரண மக்கள், தேசிய சட்ட சேவைகள் ஆணையம், தமிழ்நாடு சட்ட சேவைகள் ஆணையம், மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு ஆகியவற்றை பற்றி அறிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொருவருக்கும் சட்ட பிரச்னைகள் மட்டுமின்றி, மத்திய, மாநில அரசு திட்டங்கள் என்னென்ன, அவற்றை எவ்வாறு பெறுவது என்பதை அறிந்து கொள்ள, மாவட்ட சட்ட உதவி மையத்தை மக்கள் நாடலாம்.
மாவட்ட இலவச சட்ட உதவி மையம் நீதிமன்றத்தில் வழக்காட மட்டுமின்றி, மக்களின் அடிப்படை உரிமைகளை பெற்று தருகிறது. மக்களுக்கு நேரடியாக கிடைக்க வேண்டிய மத்திய, மாநில அரசு திட்டங்களை அறிந்து கொள்ளவும், கிடைக்கவும் மாவட்ட இலவச சட்ட உதவி மையத்தை அணுகலாம். அதன் மூலம் நீதிபதிகள் மக்களாகிய உங்களுக்கு வழிகாட்டுவார்கள்.
நம் ஒவ்வொருவருக்கும் இருக்க இடம், உண்ண உணவு, உடுக்க உடை மற்றும் நம் குழந்தைகளுக்கு கட்டாய கல்வி அவசியம். பாடப்புத்தகத்தில் இருந்து கலர் பென்சில், கிரயான்ஸ் உள்ளிட்ட அனைத்தையும் அரசு கொடுக்கிறது. இப்படி பல நல்ல திட்டங்களை அரசு செய்து கொடுக்கிறது. அவற்றை மக்கள் பயன்படுத்தி முன்னேற வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி லதா, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் ஜெயந்தி, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், எஸ்.பி., தங்கதுரை, தலைமை குற்றவியல் நீதிபதி கோபாலகிருஷ்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் திருலோகசுந்தர், ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் பகான் ஜெகதீஸ் சுதாகர், யுனைடெட் வக்கீல் சங்க தலைவர் விஜயராகவன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement