அத்திக்கடவு - அவிநாசி திட்ட தொகுதிகளில் அ.தி.மு.க., கவனம்

திருப்பூர்:திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்ட மக்களின், 60 ஆண்டு கால கோரிக்கை அத்திக்கடவு - அவிநாசி திட்டம்.

முதல்வராக பழனிசாமி பதவி வகித்த போது, இத்திட்டத்திற்கென, 1,652 கோடி ரூபாயை முழுக்க முழுக்க மாநில அரசு நிதியில் இருந்து ஒதுக்கினார்; பதவிக்காலம் முடியும் தருவாயில், 80 சதவீத பணிகள் நிறைவு பெற்றிருந்தன. அ.தி.மு.க.,வின் கோட்டையாக கருதப்பட்ட கொங்கு மண்டலத்தில், 'அத்திக்கடவு திட்டம், நிரந்தர ஓட்டு வங்கியை ஏற்படுத்திக் கொடுக்கும்' என அ.தி.மு.க., தலைமை 'கணக்கு' போட்டது.தற்போது இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. திட்டம் சார்ந்து மேட்டுப்பாளையம், அவிநாசி, சூலுார், கவுண்டம்பாளையம், பெருந்துறை, கோபி, திருப்பூர் வடக்கு என, ஏழு சட்டசபை தொகுதிகள் நேரடி பயன் பெறுகின்றன. கடந்த, 2021 சட்டபை தேர்தலில், இந்த ஏழு தொகுதிகளிலும் அ.தி.மு.க., வேட்பாளர்களே வெற்றி பெற்று, எம்.எல்.ஏ.,க்களாக உள்ளனர். சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வின் கை ஓங்கினாலும், லோக்சபா தேர்தலில், தி.மு.க., அதிக ஓட்டுகளை பெற்று, எம்.பி.,க்களை பெற்று விடுகிறது.

'கணக்கு' மாறுமா?அதன்படி, 2024 லோக்சபா தேர்தலில், இந்த ஏழு சட்டசபை தொகுதிகளிலும், மொத்தம் பதிவான ஓட்டு அடிப்படையில், தி.மு.க., 42.14 சதவீத ஓட்டுகளை பெற்றது; அ.தி.மு.க. 25.47 சதவீத ஓட்டுகளை மட்டுமே பெற்றது. அதே நேரம், பா.ஜ., 24.04 சதவீத ஓட்டுகளை பெற்றது. ஆனால், கடந்த 2019 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., 36 சதவீத ஓட்டுகளை பெற்றிருந்தது, குறிப்பிடத்தக்கது.இந்த கணக்குப்படி, 'கடந்த லோக்சபா தேர்தலில், அத்திக்கடவு தொகுதிகளில், அ.தி.மு.க.,வின் ஓட்டுகளை, பா.ஜ., அறுவடை செய்திருக்கிறது; அத்திக்கடவு - அவிநாசி திட்ட ஆதரவாளர்களும் தங்கள் ஆதரவை மாற்றி கொண்டு விட்டனர்' என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.இம்முறை, மீண்டும் அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி மலர்ந்திருக்கிறது. அத்திக்கடவு திட்டம் சார்ந்த தொகுதிகளில், கடந்த முறை பெற்ற ஓட்டுகளை விட, கூடுதல் ஓட்டு பெற வேண்டும் என்ற முனைப்பில், அ.தி.மு.க.,வினர் களப்பணியாற்ற திட்டமிட்டுள்ளனர்.

Advertisement