21ல் பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தம் நாமக்கல் மாவட்டத்தில் 3 மையங்கள் ஏற்பாடு

நாமக்கல், நாமக்கல் மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி, வரும், 21ல், மூன்று மையங்களில் துவங்குகிறது.
தமிழகத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச், 28ல் துவங்கியது. நாமக்கல் மாவட்டத்தில், 92 மையங்களில், பத்தாம் வகுப்பு தேர்வு நடந்தது. அதில், அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகள் என, 275 பள்ளிகளை சேர்ந்த, 19,038 மாணவ, மாணவியர் தேர்வெழுதினர். இத்தேர்வு, கடந்த, 15ல் முடிந்தது.
நாமக்கல் மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீடு செய்வதற்கு, நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, ராசிபுரம் அண்ணாசாலை அரசு மேல்நிலைப்பள்ளி, திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்., மெட்ரிக் பள்ளி என, மூன்று மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு, விடைத்தாள் திருத்தப்படுகிறது. வெளிமாவட்டத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு தேர்வு விடைத்தாள்கள், மேற்கண்ட, மூன்று மையங்களுக்கும் கொண்டு வரப்பட்டுள்ளன.
அதேபோல், நாமக்கல் மாவட்டத்தில் தேர்வெழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள், இரண்டு மையங்களில் சேகரிக்கப்பட்டன. அவை, வேறு மாவட்டங்களில் உள்ள விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. மாவட்டத்தில் உள்ள, மூன்று விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு முகாம் அலுவலராக, அரசு உயர்நிலைப்பள்ளி மூத்த தலைமையாசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வரும், 21 முதல், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணி துவங்குகிறது. அதற்கு தேவையான முன்னேற்பாடுகளை, பள்ளி கல்வித்துறை அலுவலர்கள், மூத்த தலைமையாசிரியர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டுள்ளனர். பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி, நேற்று முன்தினம் முடிந்தது. இன்று முதல், பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணி துவங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement