கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியவர் கைது

ராசிபுரம், சேலத்தை சேர்ந்தவர் விஜய், 45; இவர் தன், 'சுவிப்ட்' காரில், நேற்று முன்தினம் இரவு, நாமக்கல்லில் இருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
ராசிபுரம் அடுத்த ஆண்டகலுார்கேட் பகுதியில், கோவாவை சேர்ந்த சுரேஷ், 40, தன் குடும்பத்தினருடன் காரிலிருந்து இறங்கி கொண்டிருந்தார். அப்போது, மது போதையில் அதிவேகமாக காரை ஓட்டி வந்த விஜய், சாலையோரமாக நிறுத்தியிருந்த சுரேஷின் கார் மீது மோதி சேதப்படுத்திவிட்டு, நிற்காமல் சென்றார்.
தொடர்ந்து, சாலையில் தாறுமாறாக சென்ற காரை, பொதுமக்கள், ஐந்து கிலோ மீட்டர் துாரம் துரத்திச்சென்று, ஏ.டி.சி., டிப்போ அருகே வழிமறித்து பிடித்தனர். அப்போது, விஜய் மது போதையில் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து ராசிபுரம் போலீசாருக்கு, பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். ராசிபுரம் டி.எஸ்.பி., விஜயகுமார் சம்பவ இடத்திற்கு வந்து, விஜயிடம் விசாரணை நடத்தினார். அப்போது, போதையில் இருந்ததால், காரை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.

Advertisement