மதுபானம் கடத்திய இருவர் கைது 50 பாட்டில்கள் பறிமுதல்

வானூர்,; புதுச்சேரியில் இருந்து தமிழகப் பகுதிக்கு பைக்கில் மதுபாட்டில்கள் கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.

கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் மீனா தலைமையில் போலீஸ்காரர்கள் பாண்டியன், மோகன்தாஸ் வானூர் நீதிமன்றம் அருகில் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டிருந்தனர்.

அப்போது, சேதராப்பட்டில் இருந்து திண்டிவனம் நோக்கி பைக்கில் வந்த இருவரை மடக்கி விசாரித்து, பைக்கை சோதனை செய்தனர். அப்போது, பைக்கில் மதுபாட்டில் கடத்தி செல்வது தெரியவந்தது.

போலீஸ் விசாரணையில், வானூர் தாலுகா கிளியனூர் அடுத்த கிளாப்பாக்கம் முத்தாலம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் சக்திவேல், 30; அதே பகுதியை சேர்ந்த மண்ணாங்கட்டி மகன் மனோகர், 29; என்பதும், புதுச்சேரி மாநிலம் சேதராப்பட்டில் இருந்து சொந்த ஊரில் நடக்கும் துக்க நிகழ்ச்சிக்கு வரும் நண்பர்களுக்கு கொடுப்பதற்கு, மதுபாட்டில்கள் கடத்திச்சென்றது தெரிய வந்தது.

அதன் பேரில் போலீசார் அவர்களை கைது செய்து 50 மதுபாட்டில்கள் மற்றும் ஒரு பைக்கை பறிமுதல் செய்தனர்.

Advertisement