18 மாதங்கள் கடந்தும் முடியாத மேம்பால பணி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்

ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால பணி துவங்கி, 18 மாதங்கள் முடிந்த போதும், பணிகள் இன்னும் முழுமை பெறவில்லை. அதனால் வாகன ஓட்டிகள் நெரிசலில் சிக்கி திணறி வருகின்றனர்.
கிருஷ்ணகிரியில் இருந்து பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் இரு மார்க்கத்திலும் தினமும், 70,000 க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. விடுமுறை நாட்களில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் வரை செல்லும்.
வாகன போக்குவரத்து அதிகமுள்ள இச்சாலையில் உள்ள ஓசூர் சிப்காட் ஜங்ஷன், கோபசந்திரம், சாமல்பள்ளம், சுண்டகிரி, மேலுமலை மற்றும் கிருஷ்ணகிரி போலுப்பள்ளி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை அருகே என மொத்தம், 6 இடங்களில் மேம்பாலம் கட்டும் பணியை, 2023 அக்டோபரில் தேசிய நெடுஞ்சாலைத்துறை துவங்கியது. 12 மாதத்தில் பால பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டது.
இதில், சாமல்பள்ளம் பகுதியில் மட்டும் பணி முடிவடைந்துள்ளது. மற்ற, 5 இடங்களிலும் மந்த கதியில் பணிகள் நடக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் தினமும் கடும் அவதியடைந்து வருகின்றனர். பால வேலைகள் துவங்கி, 18 மாதங்கள் முடிந்து விட்டன.
இந்நிலையில், வெள்ளி, சனி, ஞாயிறு என தொடர்ந்து விடுமுறை காரணமாக, கர்நாடகா, ஓசூர் பகுதியில் இருந்து சொந்த ஊருக்கு மக்கள் பலர் நேற்று படையெடுத்தனர். அதனால், மேம்பால வேலை நடக்கும் கோபசந்திரம் பகுதியில், ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து முடங்கி, 3 கி.மீ., துாரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்தன. அப்பகுதியை வாகன ஓட்டிகள் கடந்து செல்ல, 30 நிமிடங்கள் வரை ஆனதால், வாகன ஓட்டிகள் வெறுப்
படைந்தனர்.

Advertisement