வண்டலுார் பேருந்து நிறுத்தம் முன் 'பார்க்கிங்' பயணியர் கடும் அவஸ்தை

வண்டலுார்:வண்டலுாரில், பேருந்து நிறுத்தத்தை ஆக்கிரமித்து, 'பார்க்கிங்' பகுதியாக பயன்படுத்தி வரும் தனியார் வாகனங்களால், பயணியர் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தாம்பரம் அடுத்த சானிடோரியம் பேருந்து நிலையத்தில் இருந்து, வண்டலுார் வழியாக, வாலாஜாபாத், காஞ்சிபுரம், வேலுார், ஆரணி, சித்துார், பெங்களூரு ஆகிய ஊர்களுக்கு நேரடி பேருந்து சேவைகள் உள்ளன.

வண்டலுார் பகுதிவாசிகள், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், தொழில், வேலை, கல்லுாரி செல்ல இந்த பேருந்துகளை நம்பி உள்ளனர். இதற்காக, வண்டலுார் மேம்பாலத்தின் முடிவில், தாங்கல் குளம் ஓரமாக, எதிரெதிரே இரண்டு பேருந்து நிறுத்தங்கள் உள்ளன.

ஆனால், இந்த இரண்டு பேருந்து நிறுத்தங்களை சுற்றியும், கார், லாரி, வேன் உள்ளிட்ட தனியார் வாகனங்கள் எப்போதும் 'பார்க்கிங்' செய்யப்பட்டிருப்பதால், இவ்வழியாக செல்லும் அரசு பேருந்துகள், இந்த பேருந்து நிறுத்தத்தில் நிற்க முடியாமல், கடந்து சென்று விடுகின்றன.

இதனால், வேலைக்கு செல்வோரும், கல்லூரி மாணவர்களும் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியாமல், கடும் அவஸ்தையை சந்தித்து, மன உளைச்சலுக்கும் ஆளாக்கப்படுகின்றனர்.

எனவே, வாலாஜாபாத் சாலை, வண்டலுார் பேருந்து நிறுத்தத்தின் முன் தனியார் வாகனங்கள் நிறுத்த தடை செய்ய வேண்டும். மீறி நிறுத்தப்படும் வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதிக்க வேண்டும், என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement