கல்லுாரி மாணவர்கள் மோதலை தடுக்க சிறப்பு குழு: அரசுக்கு ஐகோர்ட் பரிந்துரை
சென்னை:கல்லுாரி மாணவர்கள் மோதலில் ஈடுபடுவதை தடுக்க, சிறப்பு குழு அமைக்க வேண்டும்' என, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்பாடி பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகன் சுந்தர். சென்னை மாநில கல்லுாரியில், பி.ஏ., அரசியல் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த ஆண்டு அக்., 4ம் தேதி, சென்ட்ரல் ரயில் நிலையத்தில், பச்சையப்பன் கல்லுாரி மாணவர்களால் சரமாரியாக தாக்கப்பட்டார்.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி, கடந்த அக்., 9ல் இறந்தார். இது தொடர்பாக, பெரியமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து, பச்சையப்பன் கல்லுாரி மாணவர்கள் ஏழு பேரை கைது செய்தனர்.
இவர்களில், ஈஸ்வரன், ஈஸ்வர், யுவராஜ், சந்துரு ஆகியோர் ஜாமின் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
மனுக்களை விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, அவர்களுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி, மாணவர்கள் இடையே நடக்கும் மோதலை தடுப்பதற்கு ஆலோசனைகள் வழங்க, இரு கல்லுாரி முதல்வர்கள், உயர்கல்வித் துறை, காவல் துறை அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் அமைப்புகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.
வழக்கு விசாரணையின் போது, காவல் துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'தமிழகம் முழுதும், 10 ஆண்டுகளில், மாணவர்கள் மோதல் தொடர்பாக 231 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் மட்டும், 198 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இவற்றில் பச்சையப்பன் கல்லுாரி மாணவர்கள் மீது 58; மாநில கல்லுாரி மாணவர்கள் மீது 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன' என்று கூறப்பட்டிருந்தது.
இதை ஆய்வு செய்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
மனுதாரர்களின் பெற்றோரிடம் விசாரித்த போது, அவர்கள் தங்கள் குழந்தைகளின் மனப்பான்மையை அறியாமல் உள்ளனர். தங்கள் குழந்தைகள் முதல் பட்டதாரியாகி, குடும்பத்தின் பாதுகாவலனாக இருப்பர் என்று எண்ணி, கல்விக்காக கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை செலவழித்துள்ளதாக தெரிவித்தனர்.
அவர்களின் தியாகத்தையும், உன்னத நோக்கத்தையும் உணராமல், மாணவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டு தங்கள் எதிர்காலத்தையே இழக்கின்றனர். கணிதமேதை ஸ்ரீனிவாச ராமானுஜன், முன்னாள் முதல்வர் அண்ணாதுரை உள்ளிட்ட பிரபலங்கள், பச்சையப்பன் கல்லுாரியில் படித்துள்ளனர்.
நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி.ராமன், பிரபல நீதிபதிகள், மாநில கல்லுாரியில் படித்துள்ளனர். இத்தகைய புகழ்பெற்ற கல்லுாரிகளில், தற்போது மாணவர்கள் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு, அவர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி, தங்களின் எதிர்காலத்தை ஆபத்தில் ஆழ்த்துவது வருத்தம் அளிக்கிறது.
குற்றவாளிகள் பிறப்பதில்லை; உருவாக்கப்படுகின்றனர். எந்த பெற்றோரும், தங்கள் குழந்தை சமூக விரோதியாக மாறுவதை விரும்புவதில்லை. சமூகமும், இத்தகைய நடத்தையை பொறுத்துக் கொள்ளாது.
அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்கள், தங்கள் மாணவர்களுக்கு லட்சியத்தையும், நல்ல மதிப்புகளையும் வளர்க்க பாடுபடுகின்றனர். இந்த பிரச்னைகள் வளாகத்திற்கு வெளியே நடக்கின்றன, ஒருசில மாணவர்கள் மட்டுமே, இதில் ஈடுபடுகின்றனர் எனக்கூறி, அவற்றை கல்வி நிறுவனங்கள் புறக்கணிக்கக் கூடாது.
எனவே, கல்லுாரி மாணவர்கள் மோதலில் ஈடுபடுவதை தடுக்க, அறிஞர்கள், கல்வியாளர்கள், மனநல ஆலோசகர்கள், கல்வித் துறை உயர் அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் அடங்கிய சிறப்புக் குழுவை, தமிழக அரசு அமைக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன்.
'ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா' என்ற பழமொழிக்கு ஏற்ப, மாணவர்கள் மோதல்களை தடுக்க நீண்டகால தீர்வாக, ஆசிரியர் - பெற்றோர் கூட்டங்களை பள்ளிகளில் அடிக்கடி நடத்தி, மாணவர்களின் பிரச்னைகளை அடையாளம் கண்டு தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது