தமிழகத்தில் தி.மு.க., அரசு தத்தளிக்கிறதுகோபியில் செங்கோட்டையன் பேச்சு

கோபி:''தமிழகத்தில், தி.மு.க., அரசு தத்தளித்து கொண்டிருக்கிறது,'' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.
பெண்களை இழிவுப்படுத்தும் வகையில், ஆபாசமாக பேசிய அமைச்சர் பொன்முடியை கண்டித்து, அ.தி.மு.க., ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம் சார்பில், கோபியில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற, கோபி எம்.எல்.ஏ., செங்கோட்டையன் பேசியதாவது:
அ.தி.மு.க., சார்பில் பொதுச்செயலர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆணைப்படி கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. தமிழகத்தில் சிறந்த ஆட்சியை, எம்.ஜி.ஆர்.,-ஜெயலலிதா ஆகியோர் வழியில், எதிர்க்கட்சி தலைவர் நடத்தினார்.
பெண்களை இழிவுப்படுத்தும் வகையில், அமைச்சர் பொன்முடியின் பேச்சு அமைந்துள்ளது.
அமைச்சராக பொறுப்பேற்கும் போது, 'இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும், தீங்கு விளைவிக்க கூடாது' என்று கூறித்தான் உறுதிமொழி ஏற்கின்றனர்.
அவ்வாறு உறுதிமொழி மேற்கொண்ட அமைச்சர், பெண்களை கேவலமாக பேசுவது என்பது, எதிர்பார்க்காத ஒன்று. இப்படி பேசும் அமைச்சர்களை, வரும் சட்டசபை தேர்தலில் டிபாசிட் இழக்கும் வகையில், அ.தி.மு.க., தன்னுடைய செயல்பாட்டை செய்து காட்டும். இதுபோன்ற அமைச்சர் தமிழகத்தில் இருக்கிறார் என்பது, இந்தியாவுக்கே ஒரு வேதனை. அவர் அமைச்சராக இருக்க தகுதியற்றவர்.
தமிழகத்தில் இன்று, தி.மு.க., அரசு தத்தளித்து கொண்டிருக்கிறது. அதிலும், அமைச்சர் அவ்வாறு பேசிய பின், தி.மு.க., அரசு தடுமாறி கொண்டுள்ளது. 2026 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும். நுாறு நாள் வேலையாட்களுக்கான கூலி குறித்து, சட்டசபையில் குரல் எழுப்ப, எதிர்க்கட்சி தலைவர் மூலமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், பவானிசாகர் எம்.எல்.ஏ., பண்ணாரி, முன்னாள் எம்.பி., சத்தியபாமா, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் ரமணீதரன், ஈஸ்வரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
இ.பி.எஸ்.,சை தவிர்த்த செங்கோட்டையன்
கடந்த பிப்.,9ல்., கோவை மாவட்டம், அன்னுாரில் விவசாயிகள் சார்பில், இ.பி.எஸ்.,க்கு நடந்த பாராட்டு விழாவில், செங்கோட்டையன் பங்கேற்காமல் புறக்கணித்தார்.
இதையடுத்து, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி உறுதியான நிலையிலும், இ.பி.எஸ்., பெயரை சொல்லாமல் செங்கோட்டையன் தவிர்த்து வந்தார். இந்நிலையில், கோபியில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தின் போதும், பேட்டியளித்தபோதும் செங்கோட்டையன் இ.பி.எஸ்., பெயரை உச்சரிக்காமல், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் பொதுச்செயலர் என்று மட்டுமே பேசினார்.






Advertisement