பானை இருக்கு... ஆனா தண்ணீர்...தாகம் தணிக்க சென்ற பொதுமக்கள் ஏமாற்றம்

அரூர்::அரூரில், டவுன் பஞ்., நிர்வாகம் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில், திறக்கப்பட்ட தண்ணீர் பந்தல்கள் காட்சி பொருளாக மட்டுமே இருக்கிறது. குடிப்பதற்கு தண்ணீரின்றி, பொதுமக்கள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் பஸ் ஸ்டாண்டில், கோடையை முன்னிட்டு பொதுமக்களின் தாகம் தணிக்க சில வாரங்களுக்கு முன், டவுன் பஞ்., நிர்வாகம் சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. தண்ணீர் பந்தல் திறக்கும்போது தடபுடலாக தண்ணீர், மோர் உள்ளிட்ட குளிர்பானங்கள், தர்பூசணி பழங்கள் என வழங்கப்பட்டன.
மறுநாள் முதல் இந்த தண்ணீர் பந்தலில் முறையாக தண்ணீர் கூட யாரும் வைப்பதில்லை. காலையில் பெயரவிற்கு தண்ணீர் பந்தலில் வைக்கப்பட்டுள்ள இரண்டு பானைகளில் தண்ணீர் நிரப்புவதுடன் சரி, அது தீர்ந்தவிட்டால் அதன்பின், அதில் தண்ணீர் நிரப்புவதில்லை. இது குறித்து டவுன் பஞ்., செயல் அலுவலர் நாகராஜிடம் கேட்ட போது, ''முறையாக பானைகளில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை
எடுக்கப்படும்,'' என்றார்.
அரசியல் கட்சிகள்
அரூரில், வர்ணதீர்த்தம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், நான்குரோடு உள்ளிட்ட இடங்களில், த.வெ.க.,-தி.மு.க.,-பா.ஜ., ஆகிய அரசியல் கட்சிகள் சார்பில் திறக்கப்பட்ட தண்ணீர் பந்தல்களும் காட்சி பொருளாக உள்ளன.


Advertisement