புனித வெள்ளியை முன்னிட்டு சிலுவை பாதை பவனி
தர்மபுரி புனித வெள்ளியை முன்னிட்டு, தேவாலயங்களில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில், திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள, அனைத்து தேவாலயங்களிலும், நேற்று புனித வெள்ளியை முன்னிட்டு, சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இயேசுநாதர் சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்த நாளை, கிறிஸ்துவர்கள் புனித வெள்ளியாக அனுசரிக்கின்றனர். இதையொட்டி, அந்தந்த பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் யேசுநாதர் சிலுவையில் அறையும் நிகழ்வு நடந்தது.
தர்மபுரி அருகே, பாரதிபுரத்தில் இருந்து, அன்னசாகரம் செல்லும் சாலையில், புதிதாக கட்டப்பட்டு வரும் தூய இருதய ஆண்டவர் பேராலய வளாகத்தில், புனித வெள்ளியை முன்னிட்டு, யேசுவை சிலுவையில் அறையும் நிகழ்வு நடந்தது. இதில், மாணவர்கள் யேசுவை சிலுவையில் அறையும் நிகழ்வை தத்ருபமாக நடித்து காட்டினர். அதை தொடர்ந்து, பங்குத்தந்தை அருள்ராஜ் தலைமையில், சிறப்பு பிரார்த்தனை நடந்தது. உதவி பங்குத்தந்தை யேசு பிரபாகரன், மற்றும் சிறப்பு அழைப்பாளராக ஜாக்சன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பாளர் மத்தியாஸ் உட்பட நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
* தர்மபுரி மாவட்டம், அரூர் புனித அன்னாள் துவக்கப்பள்ளியில் இருந்து, நேற்று காலை, 8:00 மணிக்கு, கிறிஸ்தவர்கள் தங்களுடைய தோள்களில் பெரிய சிலுவையை சுமந்து, தங்களை வருத்திக்கொண்டு தூய இருதய ஆண்டவர் ஆலயத்திற்கு ஊர்வலமாக வந்தனர்.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பொம்மிடி, புனித அந்தோனியார் ஆலயத்தில் சிலுவை பாதை வழிபாடு பங்கு தந்தை ஆரோக்கியஜேம்ஸ், ஊர் தலைவர் ரமேஷ் ஆகியோர் தலைமையில் நடந்தது.
*கிருஷ்ணகிரி துாய பாத்திமா அன்னை திருத்தலத்தில் சிலுவைப் பாதை நிகழ்ச்சி நடந்தது. திருத்தலத்தின் பங்குத் தந்தை இசையாஸ் தலைமையில் நடந்த இந்த சிலுவைப் பாதை பவனியில், கிறிஸ்துவர்கள் தங்களுடைய தோள்களில் பாரமான சிலுவையை சுமந்து, தங்களை வருத்திக் கொள்ளும் நிகழ்வும் நடந்தது.
* ஓசூர் டிவைன் நகரில் உள்ள குழந்தை ஏசுவின் புனித தெரேசாள் ஆலயத்தில், சிலுவை பாதை ஊர்வலம் நடந்தது. ஆலயத்தில் இருந்து ஊர்வலம் துவங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்றது. ஏசு கிறிஸ்து சிலுவையை சுமந்த பாடுகளை நினைவு கூறும் வகையில், சிலுவைகளை கையிலும், தோளிலும் சுமந்து கொண்டு, பாடல் பாடியபடி கிறிஸ்தவ மக்கள் குடும்பத்துடன் ஊர்வலமாக சென்றனர்.
தர்மபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ், செயலர் தந்தை ஆல்வின், பங்கு தந்தை அற்புதராஜ், பாத்திராஜ், கப்புச்சன் சபை சார்ந்த அருப்பணி தந்தை சுந்தர்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது