திருப்பூருக்கு அருங்காட்சியகம்

உடுமலை:திருப்பூர் மாவட்டத்தில், அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு, வரலாற்று ஆய்வாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், கடந்த, 2009ல், உருவாக்கப்பட்ட போது, தொல்லியல்துறை சார்ந்த திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மாவட்டம், உருவாகி, 15 ஆண்டுகளுக்கு மேலாகியும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

நொய்யல், அமராவதி ஆற்றங்கரை நாகரீகம் என, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டத்தில், அருங்காட்சியகம் அமைக்கவும், அதில், தொன்மையான வரலாற்று சின்னங்களை வைத்து பாதுகாக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ஆய்வாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இது குறித்து 'தினமலர்' நாளிதழிலும், கடந்த 11ம் தேதி உட்பட பல முறை செய்தி வெளியிடப்பட்டது.

இதன் எதிரொலியாக, நேற்று முன்தினம் சட்டசபையில், செய்தித்துறை அமைச்சர் சாமி நாதன், திருப்பூர், துாத்துக்குடியில், புதிய அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும் என அறிவித்தார்.

உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் குமாரராஜா, செயலாளர் சிவக்குமார், பொருளாளர் அருட்செல்வன் உள்ளிட்டோர் கூறியதாவது:

திருப்பூர் மாவட்டத்தில், அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கதக்கதாகும். இத்திட்டத்தால், அகழாய்வில் பெறப்பட்ட பொருட்களை பாதுகாக்க முடியும், இளைய தலைமுறையினரிடையே வரலாறு குறித்த விழிப்புணர்வு ஏற்படும்.

இத்தகைய திட்டங்கள், அரசின் கவனத்துக்கு செல்லும் வகையில் தொடர்ந்து செய்தி வெளியிட்டு, வழிகாட்டுவதில், 'தினமலர்' நாளிதழின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement