கர்நாடகா அரசு பஸ்சை வழி மறித்துதாக்க முயன்ற 4 வாலிபர் கைது



புன்செய்புளியம்பட்டி::புன்செய் புளியம்பட்டி அருகே, சாலையில் சென்று கொண்டிருந்த கர்நாடக மாநில அரசு பஸ்சை, தாக்க முயன்ற நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.கோவையிலிருந்து, கர்நாடக மாநிலம் மைசூரு நோக்கி கர்நாடக அரசு பஸ் நேற்று முன்தினம் மாலை சென்று கொண்டிருந்தது. புன்செய் புளியம்பட்டி அடுத்த நல்லுார் பஸ் நிறுத்தம் அருகே, சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் பஸ் சென்றபோது, இரண்டு பைக்குகளில் வந்த நான்கு வாலிபர்கள் திடீரென பஸ்சின் குறுக்கே வாகனங்களை நிறுத்தி ரகளையில் ஈடுபட்டனர். அப்போது இருவர் கற்களை எடுத்து, பஸ்சின் முன் பக்க கண்ணாடிகளை உடைக்க முயன்றனர்.


அதிர்ச்சியடைந்த ஓட்டுனர், அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகளை உதவிக்கு அழைக்க, அங்கு வந்த போலீசார் நான்கு பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் புளியம்பட்டி, சத்தியை சேர்ந்த சஞ்சய், அப்புசாமி, ரோகித், பண்ணாரி என தெரிந்தது. வழக்குப்பதிவு செய்த போலீசார் நான்கு பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரில் அப்புசாமி மீது, 40 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Advertisement