கோவை மக்களை 71 ஆண்டுகளாக குளிர வைக்கிறாள் இந்த 'காவேரி!'

த ன் மகனை தோளில் சுமந்து வருகிறார் தந்தை. 'வாங்க தம்பி சவுக்கியங்களா...' என்று கடைக்காரர் கேட்க, ''நல்லாயிருக்கேன்' என்று பதில் வந்ததும், 'உங்க அப்பா, உங்களை தோள்ல சுமந்து வந்தது ஞாபகம்... இப்போ நீங்க, உங்க பையன தோள்ல சுமந்து வந்திருக்கீங்க...' என்று, கடைக்காரர் சொன்ன போது, புலப்படுகிறது கடையின் வரலாறு.

கோவை டவுன்ஹால், 'பைவ் கார்னர்' பகுதியில், 71 ஆண்டுகளாக ஒரே இடத்தில் இயங்கி வருகிறது, 'காவேரி ஐஸ்' சர்பத் கடை. கடை சின்னதாக இருந்தாலும், இங்கு கிடைக்கும் சேவை பெரிது.

தரமான சேவையால், இன்றும் இரு தலைமுறையினரின் நம்பிக்கையை பெற்றுள்ளது.

இதன் பின்னணியில் உள்ளனர் ரமேஷ் 69, திலகவதி 62, தம்பதி.

கடையின் பயணம் குறித்து ரமேஷ் பகிர்ந்த போது...

''துவக்கத்தில் மாமனார் நடத்தி வந்த போது, அவருடன் இணைந்தேன். அப்போது, நன்னாரி, ரோஸ் மில்க் சர்பத் மட்டும் இருந்தது. விலை 10 பைசா. தற்போது ரூ.30க்கு மேங்கோ, சாக்லேட், சோடா சர்பத், சோடா சால்ட் என பற்பல வகைகள் சேர்ந்துள்ளன.

தரத்தில் சிக்கனம் செய்யாமல், வாடிக்கையாளர்களின் விருப்பங்களைக் கவனத்தில் கொண்டு, இன்று இரு தலைமுறை மக்களையும், அடிப்படை வாடிக்கையாளர்களாக வைத்து, கடை நடத்தி வருகிறோம். தற்போதைய விலைவாசியில் லாபம் குறைவுதான். அதற்காக கடையை பெரிதாக்க வேண்டுமென்று, எங்களுக்கு ஆசை இல்லை,'' என்கிறார்.

''என் தந்தை நீலகண்டன் மறைவுக்கு பின், கணவருடன் கடையில் சேர்ந்தேன். வாடிக்கையாளர்களே எங்கள் பலம். வயதானதால், இப்போது காலை 12:30 முதல் பிற்பகல் 3:00 மணி வரை மட்டுமே கடையை திறக்கிறோம்,'' என்கிறார் திலகவதி.

''தொழிலின் வளர்ச்சி லாபத்தில் அல்ல; வாடிக்கையாளர்களின் நம்பிக்கையில்...,'' என்று, விடைபெறும் முன் தம்பதி சொன்ன வாசகத்தில், அப்படியொரு வாசம்... கூடவே நன்னாரி சர்பத்தின் குளிர்ச்சியும்.

Advertisement