சாலைகளில் விபத்து 'அபாய குறியீடு' விழிப்புணர்வு ஏற்படுத்தும் போலீசார்

கோவை: மாநகரில் விபத்து நடந்த பகுதிகளில் குறிக்கும் வகையில், 'அபாய குறியீடு' வரைந்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.

கோவை மாநகர பகுதிகளில் சாலை விபத்துகள் மற்றும் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்க, போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சாலை விபத்தை தடுக்க போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இலவச ஹெல்மெட் வழங்குதல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட நிகழ்வுகளையும் போலீசார் ஏற்பாடு செய்கின்றனர்.

போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், வாகன ஓட்டிகள் விழிப்புணர்வோடு, பொறுப்புணர்வோடு நடந்துக்கொண்டால் மட்டுமே விபத்துகளை தடுக்க முடியும். சாலையில் செல்வோர் கவனமாக, மெதுவாக செல்ல வேண்டும் என்பதை நினைவுபடுத்தும் வகையில், மாநகரில் உயிரிழப்புகள் ஏற்படுத்திய விபத்து நடந்த 80 இடங்களில், 'அபாய குறியீடு' வரையப்பட்டுள்ளது. அங்கு நடந்த விபத்தின் (லைவ் போட்டோ) வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, போக்குவரத்து துணை கமிஷனர் அசோக் குமார் தெரிவிக்கையில், ''கோவை மாநகரில் விபத்து நடந்த இடத்தில் அபாய எலும்புக்கூடு, விபத்துக்கான சட்டப்பிரிவு மற்றும் மெதுவாக செல்லவும்' ஆகியவை அச்சிடப்பட்ட அபாய குறியீடு வரையப்பட்டுள்ளது.

கிழக்கு மற்றும் மேற்கு இரு பகுதிகளிலும், தலா 40 இடங்களில் வட்ட வடிவில் இந்த குறியீடு வரையப்பட்டுள்ளது. தொடர்ந்து அனைத்து விபத்து நடந்த இடங்களிலும் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம்,'' என்றார்.

Advertisement