சிட்டி கிரைம் செய்திகள்

பெண்ணுக்கு சுத்தியல் அடி



பாப்பம்பட்டி, செந்தில் நகரை சேர்ந்தவர் அன்னம்மாள், 50. திருச்சி சாலையில் உள்ள கிறிஸ்தவ கல்லறையில் குழி தோண்டும் வேலை, கல்லறை கட்டும் பணிகளை செய்து வருகிறார். அவருடன், புலியகுளத்தை சேர்ந்த பார்த்திபன், 55 என்பவரும் வேலை செய்து வருகிறார்.

கடந்த 16ம் தேதி பார்த்திபன் கல்லறையில் இருந்த இரும்பு சிலுவையை திருடி விற்பனை செய்தார். அன்னம்மாள் அவரை கண்டித்தார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த பார்த்திபன் சுத்தியலை எடுத்து, அன்னம்மாளின் தலையில் அடித்தார். மண்டை உடைந்த நிலையில், அன்னம்மாள் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் குறித்து அன்னம்மாள் அளித்த புகாரில், ரேஸ்கோர்ஸ் போலீசார் பார்த்திபனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

லாட்டரி விற்றவருக்கு சிறை



மாநகர பகுதிகளில், சட்ட விரோதமாக கேரளா லாட்டரி, மூன்று நம்பர் லாட்டரிகள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க, போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். செல்வபுரம் போலீசார் சிந்தாமணி குளம் அருகில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது அங்கு ஷெரிப், 40 என்பவர் ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சூதாட்டம்; மூவர் மீது வழக்கு



பீளமேடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, குட்ஷெட் மேம்பாலத்தின் கீழ் மூவர் பணம் வைத்து சீட்டு விளையாடிக்கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். பீளமேட்டை சேர்ந்த பரனபாஸ், சீனிவாசன், 39 சரவணம்பட்டியை சேர்ந்த நாடி முத்து, 35 ஆகிய அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.300 பணம் மற்றும் சீட்டுக்கட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

புகைபிடித்த ஏழு பேர் மீது வழக்கு



ரத்தினபுரி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, காந்திபுரம் 7வது வீதியில் பொது இடத்தில் ரத்தினபுரியை சேர்ந்த சக்திவேல், 51, கே.கே., புதுாரை சேர்ந்த கிருஷ்ணகுமார்; பவர் ஹவுஸ் அருகில் கரும்புக்கடையை சேர்ந்த ரியாஷ், 37, பி.என்., பாளையத்தை சேர்ந்த மதன் குமார், 51, காந்திபுரத்தை சேர்ந்த ஆனந்த வினோத், 29; ரத்தினபுரி பார்க் அருகில் ரத்தினபுரியை சேர்ந்த ராஜ்குமார், 35, இயாஸ், 22 ஆகிய ஏழு பேர் புகைப்பிடித்துக்கொண்டிருந்தனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர்.

Advertisement