நெருங்கிய உறவினர் இறுதி சடங்கில் விசாரணை கைதிகள் பங்கேற்க அனுமதி

7

சென்னை: 'சிறையில் உள்ள விசாரணை கைதிகள், தங்களது நெருங்கிய உறவினரின் இறுதி சடங்கில் பங்கேற்க, சிறைத்துறை அதிகாரிகளே அனுமதி அளிக்கும் வகையில், தமிழக உள்துறை செயலர் சுற்றறிக்கை வெளியிட வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் காட்டூரணி பகுதியை சேர்ந்தவர் பரக்கத்துல்லா. இவர், 'உபா' எனும் சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தில், 2022 செப்., 22ல் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில், 2023ல் என்.ஐ.ஏ., என்ற தேசிய புலனாய்வு நிறுவனம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. தற்போது, பரக்கத்துல்லா புழல் சிறையில் உள்ளார். அவரது தாய், உடல் நலக்குறைவால் மரணம் அடைந்துள்ளார்.

தாயின் இறுதி சடங்கில் பங்கேற்க, தன் சகோதரருக்கு, 10 நாட்கள் விடுமுறை அளிக்க உத்தரவிடக்கோரி, பரக்கத்துல்லா சகோதரி சரிகத்து நிஷா என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் அடங்கிய அமர்வு, விடுமுறை நாளான நேற்று அவசரமாக விசாரித்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஏ.ராஜாமுகமது, தேசிய புலனாய் நிறுவனம் சார்பில் சிறப்பு பிளீடர் ஆர்.கார்த்திகேயன், தமிழக அரசு சார்பில் ஆர்.முனியப்பராஜ் ஆகியோர் வாதிட்டனர்.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

சிறையில் உள்ள நபரின் தாய், ஏப்ரல், 18ல் அதிகாலை மரணம் அடைந்துள்ளார். அவரின் இறுதி சடங்குகள், 19ம் தேதியான இன்று ராமநாதபுரத்தில் நடக்கின்றன. தமிழக தண்டனை இடைநிறுத்த விதிகளின் கீழ், தண்டனை கைதிகளுக்கு விடுப்பு வழங்க, சிறை அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது.

ஆனால், விசாரணை கைதிகளுக்கு விடுப்பு அளிக்கும் அதிகாரம் அவர்களுக்கு இல்லை. இதற்கு நீதிமன்றங்களை தான் நாட வேண்டிய நிலை உள்ளது. நீதிமன்ற காவலில் உள்ள விசாரணை கைதிகளுக்கு, அரசு அல்லது சிறை அதிகாரிகள், விடுமுறை அளிக்கும் வகையில் விதிகள் இல்லாததால், அவர்களால் அனுமதி வழங்க முடியாது.

விசாரணை கைதியின் அடிப்படை உரிமைகள் மற்றும் இறந்த நபரை கண்ணியமான முறையில் அடக்கம் செய்வதற்கான உரிமை உள்ளது என்பதை, கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, விசாரணை கைதிகளின் தாய், தந்தை, கணவன் அல்லது மனைவி, பிள்ளைகள் போன்ற நெருங்கிய உறவுகள் மரணம் அடைந்தால், அவர்களின் இறுதி சடங்கில் பங்கேற்க, சிறைத்துறை அதிகாரிகள் அனுமதி வழங்கும் வகையில், தமிழக உள்துறை செயலர் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும்.

தாயின் இறுதிச் சடங்கில் பங்கேற்க, பரக்கத்துல்லாவை உடனே சிறையில் இருந்து அதிகாரிகள் விடுவிக்க வேண்டும். வரும் 20ம் தேதி வரை, மூன்று நாட்கள் இறுதி சடங்கில் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறது. விடுமுறை நாட்களில், சிறை அதிகாரிகளின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement