ஏப்.24ல் நிலஅளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை: 'கோரிக்கைகளை ஏற்காத வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகம் (சி.ஆர்.ஏ.,) முன் ஏப்.24ல் ஆர்ப்பாட்டம் நடத்த நிலஅளவைத்துறை அலுவலர்கள் தயாராகி வருகின்றனர்.

ஒரு குறுவட்டத்திற்கு (பிர்கா) ஒரு குறுவட்ட அளவர் அவசியம். மாற்றுத்திறனாளிகளுக்கும், 55 வயதை கடந்தவர்களுக்கும் அரசு விதிப்படி துறைத் தேர்வில் விலக்களிக்க வேண்டும். பதவி உயர்வு வாய்ப்புள்ள அனைத்து களப்பணியாளர்களுக்கும் ஒரே தேதியில் பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழ்நாடு நில அளவைத் துறை அலுவலர்கள் சங்கம் வலியுறுத்தி வருகிறது.

இதன் மாநில தலைவர் மகேந்திரகுமார் கூறியதாவது: இக்கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். ஆனால் அனைத்து மாவட்டங்களிலும் நிலஅளவை களப்பணியாளர்களுக்கு வருவாய் அலுவலர்கள் நெருக்கடி கொடுத்து தினமும் ஆய்வுக் கூட்டம், வாரந்தோறும் பணிமுன்னேற்ற அறிக்கை கேட்டு கூட்டம் நடத்துகின்றனர். இதனால் நிலஅளவைப் பணிகள் பாதிக்கின்றன. நிலுவை மனுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

எனவே ஆய்வுக் கூட்டம் தொடர்பாக உரிய சுற்றறிக்கையை கலெக்டருக்கு அனுப்ப வேண்டும் என, நிலஅளவை அலுவலர்கள் சங்கம் வருவாய் நிர்வாக ஆணையருக்கு கோரிக்கையாக வைத்தது. ஆனால் அவர் ஏற்காததை கண்டித்து ஏப்.,24 அன்று மாலை சென்னை எழிலகத்தில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம் என்றார்.

Advertisement