மதுரையில் லாரியில் சிக்கி 5 கி.மீ., துாரம் இழுத்துச்செல்லப்பட்ட இளைஞரின் உடல்

வாடிப்பட்டி: மதுரையில் நேற்று அதிகாலை நடந்த சாலை விபத்தில் டூவீலரில் வந்த இளைஞரின் உடல் லாரியில் சிக்கி 5 கி.மீ., துாரம் இழுத்துச்செல்லப்பட்டது. பொதுமக்கள் விரட்டிச்சென்று தடுத்து உடலை மீட்டனர்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே வடுகப்பட்டியைச் சேர்ந்தவர் ஆனந்தன்.

இவரது மகன் சூரியபிரகாஷ் 30. லாரி செட்டில் வேலை செய்தார். இவருக்கு மனைவி பிரியா 25, மகள்கள் சோபா ஸ்ரீ 3, ஒன்பது மாத ரியாஸ்ரீ உள்ளனர். நேற்று அதிகாலை 4:00 மணிக்கு வாடிப்பட்டியில் இருந்துடூவீலரில் ஊர் திரும்பினார். ஆண்டிபட்டி பங்களா அருகே ஹரியானாவில் இருந்து மதுரை நோக்கி சென்ற லாரியின் பின் சக்கரத்தில் டூவீலருடன் சிக்கி உடல் 5 கி.மீ., வரை இழுத்து செல்லப்பட்டது.

கட்டப்புளி நகர் பகுதியில் வந்தபோது துக்க வீட்டில் இருந்தவர்கள், லாரியில் உடல் சிக்கி இருப்பதை கண்டு டூவீலரில் பின்தொடர்ந்து சென்று தகவல் தெரிவித்தனர். இதன்பிறகே டிரைவருக்கு தெரியவந்தது.

இடது கால் துண்டான நிலையில் சூர்யபிரகாஷ் உடல் மீட்கப்பட்டது.

அதிகாலை எங்கு சென்றார், விபத்து நடந்தது எப்படி என்பது குறித்து சமயநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement