புகையிலை பொருள் விளம்பரத்துக்கு தடை

பெங்களூரு: பஸ்களின் மீது, புகையிலை பொருட்கள் விளம்பரம் வெளியிட தடை விதிக்க கே.எஸ்.ஆர்.டி.சி., முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக, கே.எஸ்.ஆர்.டி.சி., நிர்வாக இயக்குநர் வீணா தேசாய் கூறியதாவது:

கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்களில், சிகரெட் உட்பட, மற்ற புகையிலை பொருட்கள், மதுபான உற்பத்தி விளம்பரங்கள், பொது மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும். அதை முற்றிலுமாக அகற்றும்படி, சமூக ஆர்வலர் ஒருவர் சமூக வலைதளம் மூலமாக அரசிடம் கோரிக்கை விடுத்தார். இதை கவனித்த முதல்வர் அலுவலக குறை தீர்வு பிரிவின் சிறப்பு அதிகாரிகள், கே.எஸ்.ஆர்.டி.சி., அதிகாரிகளிடம் தெரிவித்து, விளம்பரங்களை அகற்றும்படி கூறினார்.

இத்தகைய விளம்பரங்களை வெளியிட கூடாது என, சம்பந்தப்பட்ட விளம்பரதாரர்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்களில் பொருத்தப்பட்ட புகையிலை பொருட்கள், மதுபான விளம்பரங்களை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம். இனிமேல் இது போன்ற விளம்பரங்கள் வெளியிடாமல் பார்த்துக் கொள்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement