பெண்ணிடம் ஆடுகளை வாங்கி கள்ள நோட்டு கொடுத்து மோசடி

சிக்கமளூரு: பெண்ணிடம் ஆடுகள் வாங்கிக் கொண்டு, கள்ள நோட்டுகளை கொடுத்து மோசடி செய்தவரை போலீசார் தேடுகின்றனர்.

சிக்கமகளூரு மாவட்டம், கடூர் தாலுகாவின், நிடகட்டா கிராமத்தில் வசிக்கும் பலரும், ஆடு வளர்க்கும் தொழில் செய்கின்றனர். அதே போன்று ஹேமாவதி, 40, என்பவரும் ஆடுகள் வளர்த்து பிழைப்பு நடத்துகிறார்.

நேற்று முன் தினம் மாலை, இவர் வீட்டில் இருந்தபோது, அங்கு வந்த நபர் ஒருவர் ஆடுகள் வாங்க வந்ததாக, அறிமுகம் செய்து கொண்டார்.

ஆடுகளை வாங்கிக் கொண்டு, அதற்கான விலையாக 25,000 ரூபாய் கொடுத்துவிட்டுச் சென்றார். அனைத்தும் 500 ரூபாய் நோட்டுகளாக இருந்தன.

இந்த பணத்தை, தன் கணக்கில் போடுவதற்காக நேற்று காலை கடூரில் உள்ள எஸ்.பி.ஐ., வங்கிக்கு ஹேமாவதி வந்தார். அங்கிருந்த ஊழியர்கள் பணத்தை பரிசோதித்தபோது தான், 25,000 ரூபாயில், 14,000 ரூபாய் கள்ள நோட்டுகள் என்பது தெரிந்தது.

அந்த நோட்டுகளை வசப்படுத்திய வங்கி நிர்வாக இயக்குநர், சகராயபட்டணா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார், ஹேமாவதியை அழைத்து விசாரித்தனர். நடந்ததை விவரித்தார்.

போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கள்ள நோட்டுகள் கொடுத்த நபரை, போலீசார் தேடுகின்றனர்.

Advertisement