போலீஸ் செய்திகள்

முதியவர் பலி



வாடிப்பட்டி: சமயநல்லுார் புதுத்தெரு முருகபாண்டி 63. நகரி ஐஸ் கம்பெனி வாட்ச்மேன். நேற்று காலை சமயநல்லுார் ரயில்வே மேம்பாலத்திற்கு எதிர் திசையில் சைக்கிளில் சென்றார். மதுரை நோக்கி வந்த கார் மோதி காயமடைந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். சமயநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி



வாடிப்பட்டி: டபேதார் சந்தை அரிச்சந்திரன் 45, வேனில் குடிநீர் வினியோகம் செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு சமயநல்லுார் பர்மா காலனி சாடச்சி அம்மன் கோவில் தெருவில் நடந்த விழாவுக்கு தண்ணீர் வழங்க சென்றார். மோட்டாரை இயக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி இறந்தார்.

'நண்பனை கொன்றது ஏன்'



திருமங்கலம்: ராயப்பாளையம் கோவிந்தராஜ் 29, நேற்று முன்தினம் மாலை நண்பர்களோடு சேர்ந்து மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் மதுபாட்டிலால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக நண்பர் சரத்குமார் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் கூறுகையில், '' மது அருந்திய நண்பர்கள் சென்ற பின்பும், நானும் கோவிந்தராஜூம் தொடர்ந்து மது அருந்தினோம். அப்போது கோவிந்தராஜ் மது அருந்தக்கூடாது என அறிவுரை கூறினார். நீயே குடிபோதையில்தான் உள்ளாய். நீ எனக்கு அறிவுரை கூறுகிறாயா எனக் கூறி வாக்குவாதம் செய்தேன். வாக்குவாதம் முற்றியதால் பாட்டிலால் தலையில் அடித்ததில் மயங்கி விழுந்து இறந்துவிட்டார்'' என்றார்.

விபத்தில் 3 பேர் காயம்



மதுரை: பைபாஸ் ரோடு ரயில்வே பாலத்தில் பழங்காநத்தம் - காளவாசல் நோக்கி சரக்கு ஆட்டோ அதிவேகமாக வந்து கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த இரண்டு டூவீலர்கள் மோதியது. இதில் டூவீலரில் வந்த 2 பேர், ஆட்டோ டிரைவர் காயமுற்றனர்.

Advertisement