விபத்தில் காயமடைந்தவர் வைத்திருந்த நகை, பணம் உறவினர்களிடம் ஒப்படைப்பு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பாராட்டு

விருத்தாசலம்; விபத்தில் காயமடைந்தவரிடம் இருந்த ரூ.44 ஆயிரம் ரொக்கம் மற்றும் 2 சவரன் நகையை ஆம்புலன்ஸ் ஊழியர்கள், உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

விருத்தாசலம் - உளுந்துார்பேட்டை சாலையில், சிதம்பரராஜா என்பவர் நேற்று விழுப்புரம் நோக்கி பைக்கில் சென்றார். விருத்தாசலம் வயலுார் அருகே சென்றபோது, அவர் ஓட்டிச் சென்ற பைக் விபத்துக்குள்ளானது.

இதில், படுகாயமடைந்த அவரை அப்பகுதி மக்கள், 108 ஆம்புலன்சில் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது, விபத்துக்குள்ளான நபரிடம் இருந்த ரூ.44 ஆயிரம் ரொக்கம், 2 சவரன் நகை உள்ளிட்டவைகளை, ஆம்புலன்ஸ் மருத்துவ நிபுணர் மணிகண்டன், டிரைவர் கிருஷ்ணன் ஆகியோர் அவரது உறவினர்களிடம் போலீசார் முன்னிலையில் ஒப்படைத்தனர்.

இதனை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

Advertisement