குப்பை கொட்டும் இடமாக மாறிய குட்டையை சீரமைக்க வலியுறுத்தல்

காஞ்சிபுரம்,
சின்ன காஞ்சிபுரம், பெரியார் நகரில், சாலையோரம் உள்ள காசி குட்டை, அப்பகுதி நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இக்குட்டை, 2019ம் ஆண்டு நடந்த அத்திவரதர் வைபவதற்கு முன் துார்வாரி சீரமைக்கப்பட்டது.

மாநகராட்சி நிர்வாகம் இக்குட்டையை முறையாக பராமரிக்காததால், குட்டையில் தேங்கியுள்ள நீர், பாசி படர்ந்த நிலையில் உள்ளது. இந்நிலையில், அப்பகுதியில் உள்ள கடைக்காரர்கள் இறைச்சி, மீன் கழிவுகள் மற்றும் குப்பை கொட்டும் இடமாகவும் குட்டையை பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால், துர்நாற்றம் வீசுவதோடு, குட்டையில் தேங்கியுள்ள நீர் மாசடைவதால், அப்பகுதி நிலத்தடி நீரும் மாசடையும் சூழல் உள்ளது.

எனவே, காசி குட்டையை துார்வாரி சீரமைப்பதோடு, சுற்றிலும் நடைபாதை அமைத்தால், காலை, மாலையில் நடைபயிற்சி மேற்கொள்ள வசதியாக இருக்கும் என, அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement