வெயிலால் மல்லிகை விளைச்சல் அதிகரிப்பு

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பகுதியில் கடந்த சில நாட்களாக தொடரும் வெயிலால் மல்லிகை செடிகளில் பூக்கள் விளைச்சல் அதிகரித்துள்ளது.

ஆண்டிபட்டி அருகே திம்மரசநாயக்கனூர், டி. பொம்மிநாயக்கன்பட்டி, ஏத்தகோவில், கன்னியப்பபிள்ளைபட்டி, கொத்தப்பட்டி, கதிர்நரசிங்கபுரம், ராஜதானி, சேவாநிலையம், மஞ்சிநாயக்கன்பட்டி, சித்தார்பட்டி உட்பட பல கிராமங்களில் மல்லிகை பூக்கள் சாகுபடி உள்ளது. காற்று, மழை, பனி காலங்கள் மல்லிகை பூக்கள் விளைச்சலுக்கு ஏற்றதல்ல. கோடையில் மல்லிகை பூக்கள் விளைச்சல் அதிகமாகும். கடந்த சில நாட்களாக நிலவும் வெயிலின் தாக்கம் மல்லிகை விளைச்சலுக்கு ஏற்றதாக அமைந்துள்ளது.

இதனால் ஆண்டிபட்டி பூ மார்க்கெட்டிற்கு தினமும் 10 முதல் 15 டன் வரை வரத்து உள்ளது. உள்ளூர் தேவை போக மீதமுள்ள பூக்களை வியாபாரிகள் வெளியூர்களுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர்.

விவசாயிகள் கூறியதாவது: மல்லிகை செடிகளில் தற்போது புழுவின் தாக்கம் அதிகரித்துள்ளது. மருந்து தெளிப்புக்கு கூடுதல் செலவாகிறது. ஒரு ஏக்கரில் தற்போது 100 முதல் 150 கிலோ வரை பூக்கள் எடுக்க முடிகிறது. ரூ.250 முதல் 300 வரை விலை கிடைப்பதால் விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை.

வியாபாரிகள் கூறியதாவது: பங்குனி, சித்திரையில் கிராம பொங்கல் விழாக்களில் பூக்களின் தேவை அதிகம் இருக்கும்.

இதனால் கூடுதல் வரத்து இருந்தாலும் விற்பனையாகிறது. விழாக்கள் முடிந்தபின் கூடுதலாக கிடைக்கும் பூக்கள் சென்ட் தயாரிப்பு கூடங்களுக்கு அனுப்பப்படும். விளைச்சல் இல்லாத காலங்களில் மல்லிகை பூக்கள் கிலோ ரூ. 5 ஆயிரம் வரை உயர்ந்தது. இவ்வாறு தெரிவித்தனர்.

Advertisement