'அவுரங்கசீப் மதவெறி பிடித்தவர் என நேருவே குறிப்பிட்டுள்ளார்': ராஜ்நாத் சிங்

6

மும்பை: ''காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் நேருவே, முகலாய மன்னர் அவுரங்கசீபை மதவெறி பிடித்தவர்; கொடூரமான ஆட்சியாளர் என அழைத்துள்ளார்,'' என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜி நகர் மாவட்டத்தில், முகலாய மன்னர் அவுரங்கசீபின் கல்லறை உள்ளது. இதை அகற்றக் கோரி, ஹிந்து அமைப்புகள் சில நாட்களாக வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், சத்ரபதி சம்பாஜி நகர் மாவட்டத்தில் நேற்று நடந்த விழாவில், மேவார் ஆட்சியாளர் மஹாராணா பிரதாப்பின் திருவுருவ சிலையை திறந்து வைத்து, பா.ஜ., மூத்த தலைவரும், ராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங் பேசியதாவது:

தைரியம் மற்றும் தேச பக்தியின் உருவகமாக மஹாராணா பிரதாப் இருந்தார். அவரிடம் இருந்து சத்ரபதி சிவாஜி மஹாராஜ் உத்வேகம் பெற்றார்.

இடதுசாரி சார்புகளை கொண்ட சுதந்திரத்திற்கு பிந்தைய வரலாற்றாசிரியர்கள், மஹாராணா பிரதாப் மற்றும் சிவாஜி மஹாராஜுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்காமல், அவுரங்சீப் புகழ் பாடினர்.

அவுரங்கசீபை ஒரு ஹீரோ என நினைப்பவர்கள், அவர் ஒரு மதவெறி பிடித்தவர்; கொடூரமான ஆட்சியாளர் என, நேரு எழுதியதை படிக்க வேண்டும்.

மஹாராணா பிரதாப், சிவாஜி மஹாராஜ் ஆகியோர் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் அல்ல. இருவரும் முஸ்லிம்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கியவர்கள். அவுரங்காபாதை சத்ரபதி சம்பாஜி நகர் என மாற்றியதில் எந்த தவறுமில்லை.

பாபர், தைமூர், அவுரங்கசீப், கோரி, கஸ்னவி ஆகியோரைப் புகழ்ந்து பேசுவதால், எந்த முஸ்லிம் ஓட்டுகளும் கிடைக்காது. இவர்களை புகழ்பவர்கள், நம் நாட்டு முஸ்லிம்களை அவமதிக்கின்றனர். எங்களை பொறுத்தவரை, இந்தியர்கள் அனைவரும் சமமானவர்கள்; எந்த பாகுபாடும் கிடையாது.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement